தன்னிறைவு வளர்ச்சி சுற்றுச்சூழலை பறைசாற்றுகின்றன: கவர்னர் ரவி பெருமிதம்
தன்னிறைவு வளர்ச்சி சுற்றுச்சூழலை பறைசாற்றுகின்றன: கவர்னர் ரவி பெருமிதம்
ADDED : மார் 12, 2024 03:39 PM

சென்னை: ரயில் நிலையங்கள் துடிப்பான, தன்னிறைவு வளர்ச்சி சுற்றுச்சூழலை பறைசாற்றுகின்றன என என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் சேவையை தமிழகத்தில் உள்ள சகோதர, சகோதரிகள் பயன்பெறும் வகையில் தேசத்துக்கு அர்ப்பணித்ததற்காக பிரதமர்மோடி அவர்களுக்கு நன்றி. இதன் மூலம் மாநிலத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
விரைவான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பிரத்யேக சரக்கு ரயில் சேவை உள்ளிட்ட இந்திய ரயில்வே முழுவதும் ரூ. 85,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ரயில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி புதிய திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்துள்ளார். ரயில்வே உள்கட்டமைப்பில் இந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம், இணைப்பை மேம்படுத்தி, தடையற்ற, வசதியான பயணம் மற்றும் போக்குவரத்தை உறுதி செய்கிறது.
இது மேக்இன்இந்தியா எனும் இந்தியாவில் தயாரிப்போம் என்ற தேசத்தின் வலுவான ஈடுபாட்டைப் பிரதிபலிக்கிறது. நமது ரயில் நிலையங்கள் இப்போது மக்கள் மருந்தக மையத்தையும் 'ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு' விற்பனையகம் என்ற நோக்குடன் உள்ளூர் கலை மற்றும் கலாசாரத்தை ஊக்குவித்து, துடிப்பான, தன்னிறைவு வளர்ச்சி சுற்றுச்சூழலை பறைசாற்றுகின்றன. இந்த ஒருங்கிணைந்த வளர்ச்சி மாடல் சுயசார்புபாரதம், வளர்ச்சியடைந்த பாரதம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

