பழைய ஓய்வூதியம் கேட்டு பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியம் கேட்டு பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 08, 2025 01:08 AM

சென்னை:ப ழைய ஓய்வூதியம் உட்பட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலை ஆசிரியர் சங்கமான ஏ.யு.டி., மற்றும் மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலை ஆசிரியர் சங்கமான, 'மூட்டா' சார்பில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லுாரி கல்வி இயக்குனரக வளாகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம், நிலுவைத்தொகை வழங்க வேண்டும்; பேராசிரியர்களுக்கு எம்.பில்., மற்றும் பிஎச்.டி., பட்டத்திற்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டம் குறித்து, 'மூட்டா' செயலர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:
அரசு உதவி பெறும் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, பணி மேம்பாட்டு ஊதியம் நான்கரை ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளது. இது, உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில், அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.