ADDED : டிச 29, 2024 02:09 AM

'ஹோம் மேட் கேக்' மட்டுமல்லாமல், விதவிதமான டோனட், மில்லட் குக்கீஸ்களை செயற்கை நிறமூட்டிகள் இன்றி தயாரிக்கும், சென்னையைச் சேர்ந்த லஷ்மி சிதானந்தா:
என் மகனுக்காக வீட்டிலேயே டோனட் தயாரித்து வந்தேன். நான் தயாரித்த டோனட் மற்றும் குக்கீஸை சுவைத்து பார்த்த அக்கம் பக்கத்தினர், 'இதை தொழிலாகவே செய்யலாமே' என்று கூறியதை அடுத்து, பேக்கரி தொழிலில் இறங்கினேன்.
முறையான பயிற்சிகள், கேக் தயாரிக்கும் நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். மூன்று ஆண்டுகளாக தொழில் சிறப்பாக நடக்கிறது.
மைதா, சர்க்கரை, பிரிசர்வேட்டிவ்கள் மற்றும் கலர் பொருட்களை தவிர்த்து, சிறுதானியங்களை பயன்படுத்தி கேக் மற்றும் குக்கீஸ் தயாரித்து தருகிறேன். சிலவகை தானியங்களை முளைகட்டி, அரைத்து பயன்படுத்தி செய்வது தனிச்சிறப்பு.
வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரை, வெல்லம் மற்றும் பனங்கற்கண்டு, வெண்ணெய் மற்றும் செக்கில் ஆட்டிய சுத்தமான ஆர்கானிக் எண்ணெயை தான் பயன்படுத்துகிறேன். இதனால், தரமும், சுவையும் எப்போதும் சிறப்பாக இருக்கும்.
முட்டையில்லாத கேக் மற்றும் வீகன் கேக்குகளையும் தயாரிக்கிறேன். வாய்மொழி விளம்பரங்கள் மூலமாகத்தான் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். தவிர, சமூக வலைதளங்கள், ஸ்டால்கள் வாயிலாகவும் விற்கிறோம்.
பிரெஷ் கேக்குகள் மற்றும் குக்கீஸ் ஆர்டர்களை, சென்னை முழுக்க தற்போது செய்து கொடுக்கிறேன். சிலவகை டிரை கேக்குகள் மற்றும் குக்கீஸை இந்தியா முழுதும் ஆர்டர்படி அனுப்புகிறேன்.
கிட்டத்தட்ட 500 பேர் பங்கேற்ற, 'தினமலர் - மில்லட் மகாராணி' போட்டியில், இரண்டாம் பரிசு பெற்றது, மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம்.
போட்டியின் நடுவராக இருந்த, 'செப்' தாமு, நான் தயாரித்த ராகி பிரவுனியை சுவைத்த பின், வெகுவாகப் பாராட்டியதை மறக்க முடியாது. என் சமையல் திறனுக்காக, 'வெற்றி திருமகள்' சாதனை விருது உட்பட சில விருதுகளையும் பெற்றுஉள்ளேன்.
பேக்கரி உணவுகள் செய்வது குறித்து ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் வகுப்புகள் நடத்துகிறேன். இந்த தொழிலில் ஆர்வம், முயற்சி, கற்பனைத்திறன் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வீட்டிலேயே சிறிய அளவில் துவங்கி, வெற்றிகரமாக நடத்தலாம். குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய லாபகரமான இந்த தொழிலில், தரம் மற்றும் நுகர்வோரின் ஆரோக்கியத்தில் கவனம் வைத்தால், வெற்றி நிச்சயம்.

