ADDED : ஜன 10, 2024 12:13 AM
சென்னை:'திறந்தவெளி ஒதுக்கீடு எனப்படும் ஓ.எஸ்.ஆர்., நிலங்களில், பொது பயன்பாடு என்ற அடிப்படையில் தண்ணீர் தொட்டி, வழிபாட்டு தலம் கட்ட அனுமதிக்க கூடாது' என, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், நகரமைப்பு சட்டப்படி, 32,291 சதுர அடிக்கு மேற்பட்ட கட்டுமான திட்டங்களை செயல்படுத்துவோர், அதில் 10 சதவீதத்தை திறந்தவெளி நிலமாக ஒதுக்க வேண்டியது கட்டாயம்.
இந்த இடங்களை, பூங்கா, சிறுவர் விளையாட்டு திடலாக மட்டுமே, உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்த வேண்டும்.
ஆனால், பல இடங்களில் சமுதாய கூடங்கள், வழிபாட்டு தலங்கள், மேல்நிலை தண்ணீர் தொட்டிகள் கட்டப்படுகின்றன. இது தொடர்பாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் பெறுவது, பயன்படுத்துவது தொடர்பாக, பிற மாநிலங்களில் உள்ள நடைமுறைகள் குறித்த விபரங்களை பெற முடிவு செய்யப்பட்டது.
ஓ.எஸ்.ஆர்., நிலங்களில் மேல்நிலை தண்ணீர் தொட்டிகள், வழிபாட்டு தலங்கள், உள்ளாட்சி அமைப்புகளால் கட்டப்படுகின்றன.
இது நகரமைப்பு சட்ட விதிகளுக்கு எதிரானது. இதுபோன்ற கட்டுமானங்களை தடை செய்ய உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் கடிதம் எழுதப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

