ADDED : மார் 17, 2024 03:42 AM
சென்னை : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான, அவதுாறு வழக்கின் விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டு ஜூலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து, ஒரு சில கருத்துகளை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, தமிழக அரசு சார்பில், சி.வி.சண்முகத்துக்கு எதிராக அவதுாறு வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், சி.வி.சண்முகம் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்ததுடன், மனுவுக்கு அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, நான்கு வாரங்களுக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

