ADDED : ஆக 19, 2025 02:09 AM

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த, 2006 - 09 வரையிலான தி.மு.க., ஆட்சியில், வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை அப்போதைய முதல்வரான மறைந்த கருணாநிதியின் பாதுகாவலருக்கு விதிகளை மீறி ஒதுக்கியதாக, அமைச்சர் பெரியசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம், பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து விசாரணை நடத்தினார். அப்போது, அமைச்சர் பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்த மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ததுடன், வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்..
இதை எதிர்த்து அமைச்சர் பெரியசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி திபக்கர் தத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.