1865 முதல் பதிவான சொத்து ஆவணங்களின் நகல்களை ஆன்லைனில் பெறும் திட்டம் துவக்கம்
1865 முதல் பதிவான சொத்து ஆவணங்களின் நகல்களை ஆன்லைனில் பெறும் திட்டம் துவக்கம்
ADDED : பிப் 19, 2024 05:55 AM

சென்னை : சார் - பதிவாளர் அலுவலகங்களில், 1865ம் ஆண்டு முதல் பதிவான சொத்து ஆவணங்களின் நகல்களை, இணையவழியில் பெறும் வசதி துவங்கப்பட்டு உள்ளது.
பதிவுத்துறை துவங்கப்பட்டதில் இருந்து பதிவான, 10 கோடி ஆவணங்கள் தொகுக்கப்பட்டு, கணினியில் சேமிக்கப்பட்டு உள்ளன.
இதில், உயில், டிரஸ்ட் உள்ளிட்ட ஆவணங்களை தவிர்த்து, சொத்து தொடர்பான ஆவணங்களின் நகல்களை பெற, இணையவழியில் விண்ணப்பிக்கவும், தேவையான கட்டணங்களை இணைய வழியில் செலுத்தி பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.
இதற்கான பணிகள் 31.49 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மின்னணு கையெழுத்திட்ட இந்த சான்றிதழ் நகல்களை பொதுமக்கள், https://tnreginet.gov.in என்ற இணைய வழியில் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த சேவையை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவங்கி வைத்தார். உயில், டிரஸ்ட் தொடர்பான ஆவணங்களின் நகல்கள், விண்ணப்பம் செய்பவரின் அடையாள விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, சார் - பதிவாளர் அலுவலகங்களில் வழங்கப்படவுள்ளது.
வணிக வரி மற்றும் பதிவுத்துறைக்கு, 25.1 கோடி ரூபாயில், ஈரோடு மற்றும் துாத்துக்குடியில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. கோபி செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், துறையூர், புதுக்கோட்டையில் வணிகவரி அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன
அரகண்டநல்லுார், சத்திரப்பட்டி ஆகிய இடங்களில், 3.62 கோடி ரூபாயில், சார் - பதிவாளர் அலுவலக கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றை தலைமை செயலகத்தில் இருந்தபடி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.

