544 கூட்டு குடிநீர் திட்டங்களை ஆன்லைனில் கண்காணிக்க திட்டம்; ரூ.239 கோடி ஒதுக்கியது அரசு
544 கூட்டு குடிநீர் திட்டங்களை ஆன்லைனில் கண்காணிக்க திட்டம்; ரூ.239 கோடி ஒதுக்கியது அரசு
ADDED : நவ 12, 2024 02:40 AM
சென்னை: மாநிலம் முழுதும் உள்ள, 544 கூட்டுக் குடிநீர் திட்டங்களை, 'ஆன்லைன்' வழியே கண்காணிப்பதற்கான பணிகள், 239 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட உள்ளன.
காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி, ஆழியாறு, பெண்ணையாறு, கொசஸ்தலையாறு, பாலாறு உள்ளிட்ட பல்வேறு நீராதாரங்கள் வாயிலாக, 544 கூட்டுக் குடிநீர் திட்டங்களை, தமிழக குடிநீர் வாரியம் செயல்படுத்தி வருகிறது.
இதன் வாயிலாக, 13 மாநகராட்சிகள், 70 நகராட்சிகள், 323 பேரூராட்சிகள், 51,048 ஊரக குடியிருப்புகள், 576 தொழிற்சாலைகளின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இத்திட்டங்களால் தினமும், 5.02 கோடி பேர் பயன் பெறுகின்றனர். தினமும், 2.28 டி.எம்.சி., நீர் சுத்திகரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
ஒரு நபருக்கு நாள்தோறும், 55 லிட்டர் குடிநீர் வழங்குவதை உறுதி செய்யவும், குடிநீர் வீணாகும் அளவை குறைக்கவும், 'ஸ்மார்ட் மீட்டர்'களை பொருத்தி, 'ஆன்லைன்' வாயிலாக அதனை கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, 239 கோடி ரூபாயை, தமிழக குடிநீர் வாரியத்திற்கு, தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில், திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளை, குடிநீர் வாரியம் துவக்கி உள்ளது.
அதன்படி, வெளிநாடு அல்லது உள்நாட்டு தொழில்நுட்பத்தில், கூட்டுக் குடிநீர் திட்ட நீரேற்று நிலையங்கள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்ட இடங்களில், நவீன கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட உள்ளன.
இப்பணிகளை, 15 மாதங்களில் முடிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
திட்டம் செயலாக்கத்திற்கு வந்தால், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து, ஆன்லைன் வாயிலாக, 544 கூட்டுக் குடிநீர் திட்டங்களையும் கண்காணித்து, நீர் திறப்பு, நீர் குறைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியும்.

