பட்டா பெயர் மாற்றம் கோரும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: நில அளவை இயக்குனர் உறுதி
பட்டா பெயர் மாற்றம் கோரும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை: நில அளவை இயக்குனர் உறுதி
ADDED : நவ 11, 2024 04:19 AM
சென்னை; 'பட்டா பெயர் மாற்றம் கோரி ஆன்லைனில் பெறப்படும் மனுக்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என, நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பட்டா பெயர் மாற்றம் கோரி ஆன்லைனில் விண்ணப்பித்து, சரிபார்ப்பு பணிகள் முடிந்தும், இறுதி முடிவுக்காக மூன்று மாதங்களுக்கு மேலாக விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதுதொடர்பாக, நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர் மதுசூதன் ரெட்டி வெளியிட்ட அறிக்கை:
ஆன்லைன் பட்டா மாறுதலில், உட்பிரிவு இல்லாத இனங்களில், ஏப்ரல், 1 முதல் கடந்த 8ம் தேதி வரை, 16.41 லட்சம் மனுக்கள் பெறப்பட்டன.
இவற்றில், 75,934 மனுக்கள் நிலுவையில் உள்ளன. அதிலும், மூன்று மாதங்களுக்கு மேலாக, 83 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன.
ஆய்வு கூட்டம்
அதேநேரத்தில், ஆன்லைன் பட்டா மாறுதல் உட்பிரிவு இனங்களில் பெறப்பட்ட, 14.02 லட்சம் மனுக்களில், 12.02 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. இன்னும், 2 லட்சம் மனுக்கள் நிலுவையில் உள்ளன. அவற்றில், 1,907 மனுக்கள் மட்டுமே மூன்று மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளன.
ஆன்லைன் பட்டா மாறுதல் மனுக்கள் மீது, விரைவாக முடிவு எடுக்க, வருவாய் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மாநிலம் முழுதும், அனைத்து மாவட்ட வருவாய் அலுவலர்களுடன், வருவாய் துறை செயலரால், 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
ஆன்லைன் பட்டா மாறுதல் உட்பிரிவு அல்லாத மனுக்கள் மீது, 15; உட்பிரிவு மனுக்கள் மீது, 30 நாட்களுக்கு உள்ளாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாதந்தோறும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, பட்டா மாறுதல் மனுக்கள் மீது, உரிய காலத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நகர்ப்புற பகுதிகளில், ஆன்லைன் பட்டா மாறுதல் கோரும் மனுக்கள், நகர சார் - ஆய்வாளரால் தணிக்கை செய்யப்பட்டு, வட்ட ஆவண வரைவாளர் வழியாக, துணை தாசில்தாருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்த நடைமுறையை மாற்றி, வட்ட ஆவண வரைவாளர் நிலையை நீக்கம் செய்து, நேரடியாக துணை தாசில்தாருக்கு அறிக்கை சமர்பித்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் பெறப்படும், உட்பிரிவு இனங்கள் அல்லது உட்பிரிவு அல்லாத மனுக்களில், முதலில் பெறப்படும் மனுக்கள் மீது, முதலில் நடவடிக்கை எடுத்து, பட்டா வழங்கப்படுகிறது.
வி.ஏ.ஓ., மற்றும் நில அளவர், பட்டா மாறுதல் கோரி வரும் மனுக்களை தணிக்கை செய்து, பரிந்துரைக்கும் மனுக்கள், மண்டல துணை தாசில்தாருக்கு அனுப்பப்படுகின்றன.
அவரிடம் அதிக மனுக்கள் செல்வதால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, தலைமையிடத்து துணை தாசில்தாருக்கும், இக்கோப்புகளை அங்கீகரிப்பதற்கான பணி பகிர்மான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
7.13 லட்சம் பட்டா
மேலும், சார் - பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப்பதிவு செய்தவுடன், தானியங்கி முறையில் பட்டா மாறுதல், உட்பிரிவு அல்லாத இனங்களில் கிரையம் பெற்றவர் பெயருக்கு, பட்டா பெயர் மாற்றும் நடைமுறை, 2021ல் அமலுக்கு வந்தது.
இதுவரை, 7.70 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, 7.13 லட்சம் பேருக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் பட்டா மாறுதலில் துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.