வாரிசுகளுக்கான சொத்து விபரம் கூட்டு பட்டாவில் இனி இடம் பெறும்
வாரிசுகளுக்கான சொத்து விபரம் கூட்டு பட்டாவில் இனி இடம் பெறும்
ADDED : நவ 26, 2025 12:46 AM

சென்னை: வாரிசுகள் பெயரில் மொத்தமாக வழங்கப்படும் கூட்டு பட்டாக்களில், அவரவருக்கான பாகத்தை தெளிவாக குறிப்பிடுவதற்கான மாற்றங்களை விரைவில் அறிமுகப்படுத்த, வருவாய் துறை தயாராகி வருகிறது.
தமிழகத்தில், வீடு, மனை வாங்குவோர், அதற்கான பட்டாவில் பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்கின்றனர்.
இதற்கான விண்ணப்பங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதில், வருவாய் துறை அலுவலர்கள் போக்கு காட்டுவதாக புகார் கூறப்படுகிறது.
சொத்து விற்பனை பதிவு செய்யப்பட்டால், அதன் அடிப்படையில் தானியங்கி முறையிலும், விண்ணப்ப அடிப்படையிலும், பட்டா பெயர் மாற்றம் நடக்க வேண்டும்.
இதற்கான நடைமுறைகளை அரசு எவ்வளவு தெளிவுபடுத்தினாலும், வருவாய் துறை அதிகாரிகள் மக்களை அலைக்கழிப்பதை நிறுத்துவதில்லை.
அதிலும், கூட்டு பட்டாவில் உள்ள சொத்தை வெளியார் ஒருவர் வாங்கினால், அவரின் விருப்பம் அடிப்படையில், கூட்டு பட்டாவில் பெயர் சேர்ப்பது அல்லது தனி பட்டா வழங்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், தனி பட்டா கேட்டாலும், பல இடங்களில் பழைய கூட்டு பட்டாவில் புதிய உரிமையாளரை சேர்த்து விடுகின்றனர்.
அதுமட்டுமல்லாது, தனிப்பட்டா வைத்திருக்கும் உரிமையாளர் இறந்து விட்டால், அவரது வாரிசுகள் தங்கள் பெயருக்கு சொத்தை பிரிக்காமல் மாற்றி கொள்ள கோருகின்றனர். அதனால், வாரிசுகள் பெயரில் கூட்டு பட்டா வழங்கப்படுகிறது.
இதில், யாருக்கு எவ்வளவு பாகம் உரிமையானது என்ற விபரம் இருக்காது என்பதால், வாரிசுகளில் யாராவது ஒருவர் எந்த பாகத்தை வேண்டுமானாலும் விற்பனை செய்யும் நிலை ஏற்படுகிறது.
இதுபோன்ற விற்பனையை எதிர்த்து, பிற வாரிசுகள் வழக்கு தொடரும் போது பிரச்னை ஏற்படுகிறது. இதை தீர்க்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாரிசுகள் பெயரில் வழங்கப்படும் கூட்டு பட்டா நடைமுறைகளில் சில மாற்றங்கள் மேற்கொள்ள இருக்கிறோம்.
இதன்படி, வாரிசுகள் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தால், யாருக்கு எவ்வளவு பாகம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
இதன்படி, வாரிசுகள் எண்ணிக்கை அடிப்படையில், சொத்து பாகம் என்ன என்ற விபரங்களுடன் கூட்டு பட்டா வழங்க திட்டமிட்டு இருக்கிறோம். அரசின் அனுமதி கிடைத்தவுடன் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

