சொத்து விற்பனை சான்றிதழ் பதிவுக்கான கட்டணம் 3 சதவீதமாக குறைப்பு
சொத்து விற்பனை சான்றிதழ் பதிவுக்கான கட்டணம் 3 சதவீதமாக குறைப்பு
ADDED : ஜூலை 17, 2025 09:54 PM
சென்னை:நீதிமன்ற உத்தரவு அடிப்படையிலான சொத்து விற்பனை சான்றிதழ்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தை, 11 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைத்து, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், தனிநபர்களிடம் இருந்து வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போதும், அதை பதிவு செய்யும் போதும், அதன் மதிப்பில், 7 சதவீதம் முத்திரை தீர்வை, 2 சதவீதம் பதிவு கட்டணமாக வசூலிக்கப்படும். இதுவே, தற்போது அமலில் உள்ளது.
அதேநேரம், கடனில் மூழ்கிய சொத்துக்களை வங்கிகள் ஏலம் விடும் போதும், நீதிமன்றம் வாயிலாக சொத்துக்களை ஏலம் விடும் போதும், இந்த கட்டணம் இருக்காது.
கோரிக்கை
இதுபோன்ற நிகழ்வுகளில், கிரைய பத்திரத்துக்கு பதில், விற்பனை சான்றிதழ் தான் பதிவு செய்யப்படும்.
இதற்கு கிரைய பத்திரத்துக்கான கட்டணங்களை அமல்படுத்த முடியாது. இதை கருத்தில் வைத்து, சில ஆண்டுகளுக்கு முன், விற்பனை சான்றிதழ்களை பதிவு செய்ய, 11 சதவீதம் கட்டணம் வசூலிக்க பதிவுத்துறை உத்தரவிட்டது.
தற்போது கிரைய பத்திரத்துக்கு, முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் சேர்த்து, 9 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், விற்பனை சான்றிதழ் பதிவு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, வங்கிகள், கடன் வசூல் தீர்ப்பாயங்கள் வாயிலாக வரும் விற்பனை சான்றிதழ்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தை, 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைத்து, பதிவுத்துறை கடந்த மாதம் உத்தரவிட்டு இதற்கான அரசாணை பிறப்பிக்கப் பட்டது.
அரசாணை
இந்நிலையில், நீதிமன்றங்கள் வாயிலாக பிறப்பிக்கப்படும் விற்பனை சான்றிதழ்களை பதிவு செய்வதற்கான 11 சதவீத கட்டணத்தை, 3 சதவீதமாக குறைத்து, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
சொத்தின் சந்தை மதிப்பு அடிப்படையில், இந்த தொகை கணக்கிடப்படும் என, பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கான அரசாணையை, பதிவுத்துறை செயலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பிறப்பித்துள்ளார்.