'தியேட்டர்களை மூடும் நிலை வரும்' உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை
'தியேட்டர்களை மூடும் நிலை வரும்' உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை
ADDED : பிப் 21, 2024 02:36 AM

சென்னை : ''தமிழக அரசும், தயாரிப்பாளர்களும் எங்களின் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், தியேட்டர்களை மூடும் நிலை வரும்,'' என, தமிழ்நாடு தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், சென்னை வடபழனியில் நேற்று நடந்தது. கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
புதிதாக வெளியாகும் திரைப்படங்கள், ஓ.டி.டி.,யில் நான்கே வாரங்களில் வெளியாவதால், தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் கூட்டம் குறைந்து வருகிறது. இதனால், பெரும் இழப்பு ஏற்படுகிறது. புதிய திரைப்படங்களை எட்டு வாரங்களுக்கு பிறகே, ஓ.டி.டி.,யில் வெளியிட வேண்டும்
நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் தியேட்டர்களுக்கு, 8 சதவீத உள்ளூர் வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை அரசு நீக்க வேண்டும்
பழைய தியேட்டர்களை புதுப்பிக்கும் போது, நகர் ஊரமைப்பு துறைக்கு சென்று புதுப்பிக்க வேண்டியுள்ளது. ஆனால், முன்பிருந்தபடி எளிய முறையில் பொதுப்பணித்துறை அனுமதி இருந்தால் போதும் என்ற, நடைமுறையை அமல்படுத்த வேண்டும்
தியேட்டர் உரிமையாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் இடையே இருந்த, கண்காணிப்பு பணியாளருக்கான சம்பளம் இருதரப்பிலும் பகிர்ந்து தரப்பட்டது. வரும் காலங்களில் வினியோகஸ்தர்களே சம்பளம் வழங்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் முடிந்ததும், தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், பொருளாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் அளித்த பேட்டி:
தியேட்டர் பராமரிப்பு கட்டணம், குளிர்சாதன வசதி இருந்தால், டிக்கெட்டுக்கு 4 ரூபாய்; மற்றவற்றில், 2 ரூபாய் உள்ளதை, 10, 5 ரூபாயாக மாற்ற வேண்டும். தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கான பங்கீட்டு தொகை, தற்போது அதிகமாக உள்ளது. வரும் மார்ச் 1 முதல், 60 சதவீதத்திற்கு மேல் கொடுப்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம்.
கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகளையும், தியேட்டரில் திரையிட அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விரைவில் தியேட்டர்கள் மூடும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

