தி.மு.க., குறித்து அவதுாறு பெண் சாமியாருக்கு 'காப்பு'
தி.மு.க., குறித்து அவதுாறு பெண் சாமியாருக்கு 'காப்பு'
ADDED : மே 31, 2025 01:46 AM

போச்சம்பள்ளி : தி.மு.க., தலைமை மற்றும் கட்சியினர் குறித்து அவதுாறு வீடியோ வெளியிட்ட பெண் சாமியார் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த காட்டாகரம் பகுதியில், ஓம் சக்தி கோவில் கட்டி, 15 ஆண்டுகளாக அருள்வாக்கு கூறுபவர், கீதா, 39. இவர், சமூக வலை தளங்களில் 'அருள்வாக்கு அம்மா' என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
கடந்த 2023 மார்ச் 6ல், மகாராஜா கடையைச் சேர்ந்த பார்த்திபன், 21, என்ற வாலிபரை, கோவிலில் அடைத்து வைத்திருப்பதாக கூறி, அவரது தந்தை போச்சம்பள்ளி போலீசில் அளித்த புகார்படி, கீதாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பின்னர், அவர் ஜாமினில் வெளியே வந்தார். கீதா ஆறு நாட்களுக்கு முன், தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் மற்றும் தி.மு.க.,வினர் குறித்து தகாத வார்த்தைகளில் பேசி உள்ளார்.
மேலும், இவர் மீது 2023ல் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர், தர்மபுரியில் பணிசெய்த டி.எஸ்.பி., ரத்தனகுமார் குறித்தும் தரக்குறைவான வார்த்தைகளில் பேசி, சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதுகுறித்து, போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில், தி.மு.க., பர்கூர் நிர்வாகி மே 25ல் புகார் அளித்தார். கீதாவை போலீசார் நேற்று கைது செய்தனர்.

