ADDED : மார் 01, 2024 12:07 AM
திருப்பூர்:'கோவில் சொத்துக்களை பாதுகாக்கவும், மீட்கவும் சிறப்பு சட்டங்களை இயற்ற வேண்டும்' என, ஹிந்து முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது.
அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் நிதியில் இருந்து கல்லுாரிகள் துவங்குவது; கோவில் நிதியை தவறாக பயன்படுத்துவது போன்றவற்றை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு விசாரணையின் போது, புதிதாக கல்லுாரிகள் துவங்க தடை விதித்தும், ஏற்கனவே துவங்கப்பட்டுள்ள கல்லுாரிகள் வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்ற அடிப்படையில், தொடர்ந்து நடத்த அனுமதித்தும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
கோவில் நிலங்களில் அரசு நிதியை பயன்படுத்தி, கல்லுாரி கட்டப்பட்டிருந்தால் அத்தகைய நிலங்களை பயன்படுத்த நியாயமான வாடகையை நிர்ணயம் செய்வது குறித்து அறநிலையத் துறை மற்றும் மாநில அரசின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவில் நிலங்களை வாடகைக்கு பெற்று கல்லுாரி கட்டுவதால், கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கப்படும்; கோவிலுக்கு வருவாய் கிடைக்கும் என்ற நல்ல நோக்கத்தில் கோர்ட் கருத்து தெரிவித்து உள்ளது.
ஆனால், அரசின் கல்வித் துறையும், அறநிலையத் துறையும் எந்தளவுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிப்பர்; வாடகையை உரிய முறையில் நிலுவை இல்லாமல் செலுத்துவர் என்பதை உறுதி செய்ய முடியாது.
வாடகை செலுத்தப்படாவிட்டாலும், ஒரு நடவடிக்கையும் இருக்கப் போவதில்லை. மாநில அரசும், அறநிலையத் துறையும் கோவில் சொத்து பாதுகாப்பை பிரதானமாக கொண்டு, சரியான தீர்வை கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும்.
கோவில் சொத்து பாதுகாப்பு, மீட்பு தொடர்பான சிறப்பு சட்டங்களை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

