மனித கழிவை உண்ணும் போராட்டம்; விவசாய சங்கத்தினர் செயலால் 'ஷாக்'
மனித கழிவை உண்ணும் போராட்டம்; விவசாய சங்கத்தினர் செயலால் 'ஷாக்'
UPDATED : ஜன 28, 2026 06:46 AM
ADDED : ஜன 28, 2026 12:34 AM

திருச்சி: திருச்சியில், தொடர் போராட்டம் நடத்த அனுமதி கோரி, நாமம் போட்டு, அரை நிர்வாணமாக போராட்டம் நடத்திய விவசாய சங்கத்தினர், திடீரென மனித கழிவை உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்; 70 கோடி விவசாயிகள் பெற்றுள்ள 1 லட்சம் கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கோதாவரி,- காவிரி ஆறுகளை இணைக்க வேண்டும். 60 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும், மகன்,- மகள் இருந்தாலும், மாதந்தோறும், 5,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்த அனுமதி கோரினர்.
கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., அளித்த வாக்குறுதிகளையும், விவசாயிகள் கோரிக்கைகளையும் நிறைவேற்றாததை கண்டித்தும், விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்த அனுமதிக்காததை கண்டித்தும், நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகம் முன், விவசாய சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் நாமம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளின் போராட்டத்தை, கலெக்டர் மற்றும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால், ஏற்கனவே கொண்டு வந்த மனித கழிவை உண்ணும் போராட்டத்தில், அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் ஈடுபட்டனர்.
இதைப் பார்த்து அங்கிருந்த அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

