ADDED : ஆக 19, 2025 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டி.சி.எஸ்., 30,000 ஊழியர்களை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்வதாக கூறி, ஐ.டி., ஊழியர்கள் சங்கத்தினர், சென்னையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாப்பூரில் நடந்த போராட்டத்தில், பல்வேறு ஐ.டி., நிறுவன சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, யூனிட்டி ஐ.டி., ஊழியர்கள் சங்க பொதுச்செயலர் அழகுநம்பி கூறியதாவது:
டி.சி.எஸ்., நிறுவனம், அங்கு பணிபுரியும் ஊழியர்களை படிப்படியாக தொடர் பணிநீக்கம் செய்து வருகிறது. இதற்கு எந்த முன்னெச்சரிக்கையும் தருவது கிடையாது.
இதே நிலை தொடர்ந்தால், அந்நிறுவன பணியை நம்பி உள்ள பலர் பாதிக்கப்படுவர். இந்த விவகாரத்தில், அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களிடையே பேச்சு நடத்த, முத்தரப்பு குழு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.