ஆட்டோ கட்டண உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளிப்பு
ஆட்டோ கட்டண உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளிப்பு
ADDED : ஏப் 16, 2025 12:57 AM

சென்னை:ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, ஆட்டோ - கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 110 ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஓடும், 3.30 லட்சம் ஆட்டோக்களுக்கு, 2013ம் ஆண்டு 1.8 கி.மீ துாரத்திற்கு 25 ரூபாய், அடுத்த ஒவ்வொரு கி.மீ.,க்கும் தலா, 12 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
அரசு கட்டணம் நிர்ணயித்து, 12 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது, அதன்பின் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. ஆட்டோ டிரைவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், புதிய கட்டணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சட்டசபை கூட்டத்தில், ஆட்டோ கட்டணத்தை உயர்த்தி அறிவிக்கக்கோரி, அடுத்தடுத்து போராட்டங்களை நடத்த, ஆட்டோ டிரைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆட்டோ - கால்டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகள், தமிழகத்தில் நேற்று, 110க்கும் மேற்பட்ட, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், அதிகாரிகளை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.
சென்னையில், தாம்பரம், மீனம்பாக்கம், குன்றத்துார், அம்பத்துார், பூந்தமல்லி உட்பட, 18 அலுவலகங்களில் மனு அளிக்கப்பட்டது. முன்னதாக, அலுவலகங்கள் அருகே, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.
இதுகுறித்து, ஆட்டோ - கால்டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜாஹிர் ஹூசைன் கூறியதாவது:
சட்டசபையில், போக்குவரத்து துறை மானிய கோரிக்கையின் போது, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். 'மேக்ஸிகேப்' வாகனங்களுக்கு, 'சீட் பர்மிட்' உயர்த்த வேண்டும், பைக் டாக்ஸிகளை முறைப்படுத்த வேண்டும், ஓலா, ஊபர், போர்ட்டர் நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
இதை வலியுறுத்தி, 110 ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தி, வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம், கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
அடுத்து, 23ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். எங்கள் கோரிக்கையை ஏற்று அறிவிப்பு வெளியிட்டால், போராட்டத்தை கைவிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.