கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்: பதிவுத்துறை அலுவலர்கள் அறிவிப்பு
கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்: பதிவுத்துறை அலுவலர்கள் அறிவிப்பு
ADDED : டிச 09, 2024 04:11 AM

சென்னை: பணியிடத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி, போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, பதிவுத்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிவு செய்ய, பொதுமக்கள் சார் - பதிவாளர் அலுவலகம் செல்கின்றனர். அங்கு நேரடியாக வரும் மக்களை, சார் - பதிவாளர்கள் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில், பொது மக்களுக்கும், சார் - பதிவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
கடந்த வாரம் கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் சார் - பதிவாளர் அலுவலகத்தில், குறிப்பிட்ட ஆவணத்தை சார் - பதிவாளர் நிராகரித்து உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த நபர் மண்ணெண்ணெயை தன் மீதும், சார் பதிவாளர் மீதும் ஊற்றி, கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சார் - பதிவாளர் உள்ளிட்டோர் ஓட்டம் பிடித்ததால் தப்பினர்.
மதுரை மாவட்டம் பேரையூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில், பத்திரத்தை பதிய மறுத்த சார் - பதிவாளரை, ஒரு நபர் தாக்கியதில், அவரது மண்டை உடைந்தது. இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுஉள்ளது.
இதுகுறித்து, தமிழக பதிவுத்துறை அலுவலர் சங்கம் வெளியிட்ட அறிவிப்பு: பதிவுத்துறையில், பதிவு அலுவலர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்த மேடைகள், தற்போதைய அரசால் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. இதன்பின், சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டு கடமையை ஆற்றும் போது, நியாயமற்ற தாக்குதலுக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
இதனால், மகளிர் உள்ளிட்ட பதிவு அலுவலர்களுக்கு, பணி செய்யவே, பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இது, பதிவுத்துறை அலுவலர்களுக்கு கவலை அளிக்கிறது. எனவே, பாதுகாப்பை உறுதி செய்ய அரசை வலியுறுத்தி, இன்று அனைத்து சார் - பதிவாளர் அலுவலகத்திலும், அலுவலர்கள், பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்கள் உணர்வை வெளிப்படுத்துவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.