மேல்முறையீட்டை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் எழுதும் போராட்டம்
மேல்முறையீட்டை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் எழுதும் போராட்டம்
ADDED : அக் 15, 2025 01:27 AM
சென்னை:எம்.ஆர்.பி., நர்ஸ்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வருக்கு கடிதம் எழுதும் போராட்டத்தை நர்ஸ்கள் துவக்கி உள்ளனர்.
தமிழக அரசு மருத்துவமனைகளில், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., வாயிலாக தேர்வு செய்யப்பட்ட நர்ஸ்கள், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.
பணி நிரந்தரம் இவர்கள், 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்கக்கோரி, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், எம்.ஆர்.பி., நர்ஸ்களை பணி நிரந்தரம் செய்யும்படி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இதைக்கண்டித்து, மாநிலம் முழுதும் அரசு மருத்துவமனைகளில், நேற்று நர்ஸ்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். மேலும், அரசின் மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற வலியுறுத்தி, முதல்வருக்கு கடிதம் எழுதும் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்.
இதுகுறித்து, எம்.ஆர்.பி., நர்ஸ்கள் கூறியதாவது:
எம்.ஆர்.பி., நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, பணியில் சேர்ந்தோம். இரண்டு ஆண்டுகளில் எங்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும். ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் பணி நிரந்தம் செய்யாமல் அரசு வஞ்சிக்கிறது.
உறுதி இனியும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக பணி நிரந்தம் செய்ய வேண்டும். மகப்பேறு காலகட்டத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பி, எட்டு மணி நேர பணியினை உறுதிப் படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.