ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் பாதுகாப்பு கேட்டு ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் பாதுகாப்பு கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 18, 2025 02:12 AM

சிவகாசி:விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியரை மதுபோதையில் வந்த மாணவர்கள் தாக்கியதை கண்டித்து, பணி பாதுகாப்பு கேட்டு, பள்ளி முன் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் சி.ரா., அரசு மேல்நிலைப் பள்ளியில் மது அருந்தி, பள்ளிக்கு வந்ததை கண்டித்த ஆசிரியர் சண்முகசுந்தரத்தை நேற்று முன்தினம், பிளஸ் 2 மாணவர்கள் இருவர் மது பாட்டிலால் தாக்கினர். அந்த மாணவர்களை கைது செய்த போலீசார் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 11:00 மணிக்கு இடைவேளையின் போது, பணி பாதுகாப்பு கேட்டு பள்ளி முன் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதுபோல, தமிழகம் முழுதும் பல இடங்களில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, பள்ளிக்கு மது அருந்தி வந்த பிளஸ் 2 மாணவர்கள், மூன்று பேரை 'சஸ்பெண்ட்' செய்து மாவட்ட கல்வி அலுவலர் நேற்று உத்தரவிட்டார்.