எம்.எல்.ஏ., மகன் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி மறியல்
எம்.எல்.ஏ., மகன் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி மறியல்
ADDED : ஜன 20, 2024 06:25 AM
உளுந்துார்பேட்டை : வீட்டு வேலை செய்த பெண்ணை சித்ரவதை செய்த பல்லாவரம் தி.மு.க., எம்.எல்.ஏ.,வின் மகன் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி உளுந்துார்பேட்டை அருகே சாலை மறியல் நடந்தது.
உளுந்துார்பேட்டை அடுத்த திருநறுங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது பெண். இவர், சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ., கருணாநிதி மகன் ஆன்ட்ரோ மதிவாணன் வீட்டில் வேலை செய்து வந்தார்.
இளம் பெண் பொங்கல் பண்டிகைக்கு வீட்டிற்கு வந்தபோது உடலில் சூடுகாயங்கள் இருந்தது. விசாரணையில், இளம்பெண்ணை, எம்.எல்.ஏ.,வின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மார்லினா ஆகியோர் அடித்து துன்புறுத்தி சூடு வைத்தது தெரிய வந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நேற்று முன்தினம் ஆன்லைனில், அளித்த புகாரின் பேரில் திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை 5:00 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த திருநறுங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், எம்.எல்.ஏ.,வின் மகன் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி பிள்ளையார்குப்பம் - எம்.குன்னத்துார் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் திருநாவலுார் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனையேற்று மாலை 6 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.