'ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் ஒப்பந்தம் அதானிக்கு வழங்கினால் போராட்டம்'
'ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் ஒப்பந்தம் அதானிக்கு வழங்கினால் போராட்டம்'
ADDED : டிச 07, 2024 02:54 AM
சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணியின் அறிக்கை:
தமிழகத்தில் மொத்தம், 3 கோடி இணைப்பு களுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. நான்கு தொகுப்பு களாக பிரித்து, ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன.
அதில், அதானி குழுமத்தைச் சேர்ந்த, 'அதானி எனர்ஜி சொலுசன்ஸ்' நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டிருப்பதால், அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்படும் என்று, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புதுச்சேரியில் ஒரு மீட்ட ருக்கான மொத்தச்செலவு, 6,169 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டு, இரு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், ஸ்மார்ட் மீட்டர்களின் விலை, 4,000 ரூபாய் என்ற அளவுக்கு குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அதானி குழுமத்திற்கு அதிகபட்சமாக, 15,000 ரூபாய் வீதம், 80 லட்சம் மீட்டர்களுக்கு வழங்கப்பட்டால், தமிழக மக்களின் வரிப்பணம் எத்தனை ஆயிரம் கோடி தாரை வார்க்கப்படுகிறது என்பதை எளிதாக கணக்கிட்டுக் கொள்ள முடியும்.
ஸ்மார்ட் மீட்டர்களின் விலைகள் எவ்வளவு குறைந்திருக்கின்றன என்பதை கருத்தில் கொள்ளாமல், ஒப்பந்தப் புள்ளிகளை இறுதி செய்வது, எந்த வகையில் நியாயம்? அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பை யார் ஏற்பர்?
மின் வாரியமே வெளிப்படையான போட்டி ஏல முறையில், ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கு மாறாக, தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் ஒப்பந்தம் வழங்கப்பட்டால், அதை எதிர்த்து, பா.ம.க., போராட்டம் நடத்தும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.