ஹிந்து, பா.ஜ.,வினர் போராட்டம்; திருப்பரங்குன்றத்தில் போலீஸ் குவிப்பு
ஹிந்து, பா.ஜ.,வினர் போராட்டம்; திருப்பரங்குன்றத்தில் போலீஸ் குவிப்பு
UPDATED : பிப் 04, 2025 05:03 PM
ADDED : பிப் 04, 2025 04:07 AM

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி, ஹிந்து முன்னணி மற்றும் பா.ஜ.,வினர் இன்று (பிப்-4) அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஹிந்து முன்னணியினர் திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்ட ஹிந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். திருப்பூரில் இருந்து புறப்பட்ட மாநில ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். திருப்பரங்குன்றம் கோயிலுக்கு போலீஸ் தடுப்பையும் மீறி பெண்கள் உள்பட பலர் கோஷங்கள் எழுப்பினர்.
திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் முஸ்லிம்களின் தர்கா உள்ளது. தர்காவில் உயிர்பலி கொடுக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.இதனை கண்டித்து சில முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனை தொடர்ந்து மலையின் புனிதத்தை காக்க கோரி ஹிந்து அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.
ஹிந்து முன்னணி அறப்போராட்டத்தில் தென் மாவட்ட ஹிந்து அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்க முடியாத வகையில் அவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டு உள்ளனர். தடையை மீறி வாகனங்களில் வந்தால் அவற்றை பறிமுதல் செய்வதுடன், கைதும் செய்யப்படுவர் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
மலையைச் சுற்றி, 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஐந்து எஸ்.பி.,க்கள், மூன்று ஏ.டி.எஸ்.பி.,க்கள், 13 டி.எஸ்.பி.,க்கள் வெளிமாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் தலைமையில், 3,000 போலீசார் கமிஷனர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
சிக்கந்தர் மலையாக மாற்ற
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி பி.தனபால் முன்னிலையில் வழக்கறிஞர் கார்த்திகேய வெங்கடாஜலபதி ஆஜராகி முறையிட்டதாவது: திருப்பரங்குன்றம் கந்தர் மலையை, சிக்கந்தர் மலையாக மாற்ற மற்றும் மலையில் ஆடு, கோழி பலியிட முயற்சிப்பதை கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி போலீசாரிடம் அளிக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அவர் கோரினார். இந்நிலையில் இன்று இது தொடர்பான வழக்கில் மதுரை பழங்கா நத்தத்தில் ஆர்பாட்டம் நடத்த கோர்ட் அனுமதி அளித்தது.
கடும் சோதனை
144 தடை உத்தரவு மதுரை நகர் முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பரங்குன்றத்தை சுற்றிலும் உள்ள புறநகர் பகுதிகளான தோப்பூர், தனக்கன்குளம், வேடர் புளியங்குளம் விலக்கு,நாகமலை புதுக்கோட்டை மேலக்கால் விலக்கு,மதுரை -அருப்புக்கோட்டை சாலை, ராமநாதபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வரக்கூடிய வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே மதுரைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
போராட்டத்தில் ஈடுபடக் கூடியவர்கள் ரயில் மூலமாக வந்து இறங்கி விடக்கூடாது என்பதற்காக காவல் துறை தரப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வெறிச்சோடிய கோயில் சன்னதி
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு வரும் அனைத்து பாதைகளிலும் பாலங்களிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். போலீசார் கெடுபிடி காரணமாக வழக்கம் போல் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தால் அனுமதி அளிக்கப்படுவதில்லை. மேலும் கோயிலை சுற்றி உள்ள வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் ஆனால் இன்று கோயில் சன்னதியில் பக்தர்கள் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.