ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி 17ல் போராட்டம்: அனைத்து கட்சிகளுக்கும் அன்புமணி அழைப்பு
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி 17ல் போராட்டம்: அனைத்து கட்சிகளுக்கும் அன்புமணி அழைப்பு
ADDED : டிச 08, 2025 06:07 AM

சென்னை: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி, பா.ம.க., சார்பில் வரும் 17ல் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்குமாறு, தி.மு.க., தவிர்த்து, அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் பா.ம.க., தலைவர் அன்புமணி கடிதம் எழுதி உள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இட ஒதுக்கீடு பிரிவினரின் மக்கள்தொகை 69 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதை நிரூபிக்காவிட்டால், 69 சதவீத இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வாய்ப்புள்ளது.
பிற்படுத்தப்பட்டோருக்கு 26.50 சதவீதம்; முஸ்லிம்களுக்கு 3.50; மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20; பட்டியலினத்தவருக்கு 15; பட்டியலின அருந்ததியருக்கு 3; பழங்குடியினருக்கு 1 சதவீதம் என இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 141 சமூகங்கள்; பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவில் 7 சமூகங்கள்; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் 115 சமூகங்கள்; அருந்ததியர்களை உள்ளடக்கிய பட்டியலினத்தில் 76 சமூகங்கள்; பழங்குடியினத்தில் 36 சமூகங்கள் உள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும், அனைத்து சமூகங்களுக்கும் இட ஒதுக்கீடு பயன் முழுமையாக கிடைக்கவில்லை. சமமற்றவர்கள், சமமானவர்களாக ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பது தான் இதற்கு காரணம். இதை மாற்றி, அனைத்து சமூகங்களுக்கும் முழு பலன் கிடைக்க ஒரே தீர்வு, உள் இட ஒதுக்கீடு வழங்குவது தான்.
அதற்கு அடிப்படை தேவை, ஜாதிவாரி கணக்கெடுப்பு. இதை, மாநில அரசுகளே நடத்த முடியும். ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநிலத்திற்கு இல்லை என தமிழக அரசு பொய் கூறி வருகிறது.
எனவே, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மறுக்கும் தி.மு.க., அரசை கண்டித்தும், உடனடியாக கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும், சென்னையில் வரும் 17ல், பா.ம.க., சார்பில் போராட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்று, சமூக நீதியை பாதுகாக்க ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

