ஒரு நபர் அலுவலகமாக மாறிய 150 சார் பதிவகங்கள்: பத்திரப்பதிவு பணி தாமதமாவதாக பொதுமக்கள் புகார்
ஒரு நபர் அலுவலகமாக மாறிய 150 சார் பதிவகங்கள்: பத்திரப்பதிவு பணி தாமதமாவதாக பொதுமக்கள் புகார்
UPDATED : ஏப் 19, 2025 03:51 AM
ADDED : ஏப் 19, 2025 01:31 AM

சென்னை: பணியாளர் பற்றாக்குறை காரணமாக, 150 சார் பதிவாளர் அலுவலகங்கள், ஒரு நபர் மட்டுமே பணிபுரியும் அலுவலகமாக மாறி வருகின்றன.
தமிழகத்தில், 585 சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு தினசரி, 1,000 பேருக்கு மேல் வந்து செல்கின்றனர். சொத்து பத்திரப்பதிவு மட்டுமல்லாது, நிறுவனங்கள் சார்ந்த ஆவண பதிவு பணிகளும் நடக்கின்றன. இதற்காக, இந்த அலுவலகங்களில் தலா ஒரு சார் பதிவாளர், இரண்டு உதவியாளர்கள், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு எழுத்தர், ஒரு காவலர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
அதிக பத்திரங்கள் பதிவாகும் அலுவலகங்களில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படுவது வழக்கம். இது தவிர, கணினி உதவியாளர் என ஒருவர், ஒப்பந்த பணியில் நியமிக்கப்படுகிறார். ஆனால், பல இடங்களில் இந்த பணியிடம் முறையாக நிரப்பப்படவில்லை. இதனால், சார் பதிவாளர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களை, தினக்கூலி அடிப்படையில் பணியமர்த்தி கொள்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 150 அலுவலகங்களில், அரசு ஒப்புதல் அளித்த நிரந்தர பணியிடங்கள் அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்படவில்லை. சார் பதிவாளர் அல்லது பொறுப்பு சார் பதிவாளராக செயல்படும் ஒரு உதவியாளர் மட்டுமே உள்ளனர். கணினி ஆப்பரேட்டர் ஒப்பந்த ஊதியத்தில் பணிபுரிகிறார்.
பிற தேவைகளுக்கு, சார் பதிவாளர்களே தனியாக ஆட்களை அமர்த்திக் கொள்கின்றனர். இதன் அடிப்படையில், 150 சார் பதிவகங்கள், ஒரு நபர் அலுவலகங்களாக செயல்படுகின்றன. இதனால், பத்திரப்பதிவு பணிகள் தாமதமாவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு நபர் சார் பதிவாளர்அலுவலகம்என்ற நிலையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போதைய சூழலில், வருவாய்குறைந்த பல ஊர்களில் பணிபுரிய சார்பதிவாளர்கள் விரும்பாததும், இதற்கு காரணமாக உள்ளது. இதேபோன்று பிற நிலை அலுவலர்கள், பணியாளர்களும் குறிப்பிட்ட சில ஊர்களை தவிர்ப்பது, ஒரு காரணமாக அமைந்துள்ளதுகாலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில், பல இடங்களில் காலாவதியான பணியிடங்களை நிரப்ப, அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.