ADDED : பிப் 13, 2025 11:44 PM
சென்னை:பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட வேண்டிய இலவச வேட்டி - சேலைகள், பண்டிகை முடிந்தும் லட்சக்கணக்கான பயனாளிளுக்கு வழங்கப்படாதது, அவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசு சார்பில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு, ரேஷன் கடைகளில் உள்ள அரிசி அட்டைதாரர்களுக்கு, இலவச வேட்டி, சேலை வழங்கப்படும்.
இதற்கான தயாரிப்பு பணிகள், ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் துவங்கி டிசம்பருக்குள் முடிக்கப்பட்டு, பொங்கலுக்கு முன்பாக அனைவருக்கும் வழங்கப்படும்.
நடப்பாண்டு அரசு தரப்பில், தயாரிப்பு பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நிர்ணயித்தபடி, 1.77 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கலுக்கு முன் இலவச வேட்டி, சேலை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்புடன், 1.67 கோடி வேட்டி, 1.40 கோடி சேலைகள் வழங்கப்பட்டன.
விடுபட்ட 10 லட்சம் வேட்டி, 37 லட்சம் சேலைகள் தயாரிப்பு பணிகளை விரைவாக முடித்து, ஜனவரிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், பிப்ரவரி மாதமாகியும், வேட்டி, சேலை வழங்கப்படாதது, அவை கிடைக்கப் பெறாதவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இனிமேல் கிடைக்குமா, கிடைக்காதா என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து, கைத்தறித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'விடுபட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இம்மாத இறுதிக்குள் இலவச வேட்டி - சேலை வழங்கப்படும்' என்றனர்.