மஹா சிவராத்திரிக்கு பொது விடுமுறை: அரசுக்கு ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
மஹா சிவராத்திரிக்கு பொது விடுமுறை: அரசுக்கு ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
ADDED : மார் 05, 2024 07:10 AM

திருப்பூர் : ''மஹா சிவராத்திரியை முன்னிட்டு வரும், 8ம் தேதி பொது விடுமுறை அளிக்க வேண்டும்'' என்று ஹிந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: இப்பூவுலகின் ஆதியும், அந்தமுமான எல்லாம் வல்ல ஈசனை தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும் உள்ள, ஹிந்துக்கள் ஏன் வெளிநாட்டவர் கூட போற்றி வணங்கிடும் மஹா சிவராத்தரி விழா, வரும், 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இத்திருநாளில் பக்தர்கள் சிவபெருமானை நினைந்து இரவு முழுக்க விழித்து, விரதமிருந்து, உடலையும், மனதையும் செம்மையாக்கிட கொண்டாடப்படும் விழா மகா சிவராத்தரி. குமரி மாவட்டத்தில் சிவராத்திரி விழாவினை முன்னிட்டு, சிவாலய ஓட்டம் என்ற பெயரில், 110 கி.மீ., துாரமுள்ள, 11 சிவாலயங்களுக்கு ஆண்கள், பெண்கள் குழந்தைகளென ஓடிச்சென்று சிவபெருமானை வழிபடுவர். இவ்விழா சிவாலய ஓட்டம் என்று அழைக்கப்படுகிறது.
தென் மாவட்ட பகுதிகளில் சிவராத்திரி திருநாளில், சொந்த ஊரை விட்டு வெவ்வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்த தமிழர்கள் குலதெய்வ கோவில்களில் ஒன்றிணைந்து, திருவிழா கொண்டாடி, மகிழ்ந்து, நமது பாரம்பரியம் மற்றும் வழிபாட்டு முறையை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஹிந்துக்களின் பண்பாட்டு விழா சிவராத்திரி.
கோவை அருகேயுள்ள ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும், இத்திருவிழா வெகு விமரிசையாக தொடர்ந்து கொண்டாடப்படுகிறது. இதேபோல், தமிழகத்தில் ஆன்மீக அமைப்புகளும், திருமடங்களும் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றன.
ஒட்டுமொத்த மக்களின் பெருவிழாவான சிவராத்திரி திருநாளுக்காக, 15க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பொது விடுமுறை அளித்துள்ளன. தமிழகத்திலும் கூடல எந்தவொரு சிரமமுமின்றி சிவாலயங்களும், குல தெய்வ கோவில்களுக்கும் சென்று இறைவனை தரிசித்திட மஹா சிவராத்திரி திருநாளான வரும், 8ம் தேதியன்று பொது விடுமுறை அளிக்க வேண்டும்.
இதுதவிர, பக்தர்கள் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு செல்வதற்காக, 7, 8 மற்றும் 9 ஆகிய, மூன்று தினங்களுக்கு தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில், கூடுதல் பஸ்கள் இயக்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் அதில் கூறியுள்ளார்.

