ADDED : செப் 25, 2024 01:58 AM

சென்னை,:பொது மதிற்சுவர் தொடர்பாக, பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் சமரசம் ஏற்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை செனடாப் ரோட்டில், தன் வீட்டின் கட்டமைப்பை பாதிக்கும் வகையில், பொது மதிற்சுவரை இடித்து கட்டுமானம் மேற்கொள்ள, பக்கத்து வீட்டுக்காரர் மெய்யப்பனுக்கு நிரந்தரத் தடை விதிக்குமாறு, உயர் நீதிமன்றத்தில் நடிகை திரிஷா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பொது மதிற்சுவரை இடிக்கவோ அல்லது கட்டுமானம் மேற்கொள்ளவோ, மெய்யப்பனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, திரிஷாவுக்கும், எதிர் தரப்புக்கும் இடையே பிரச்னை பேசி தீர்க்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதி, நடிகை திரிஷா செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திருப்பியளிக்க, உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.