பன்றி இறக்குமதிக்கு முன்னுரிமை: இனப்பெருக்க கொள்கை வெளியீடு
பன்றி இறக்குமதிக்கு முன்னுரிமை: இனப்பெருக்க கொள்கை வெளியீடு
ADDED : அக் 08, 2024 12:29 AM

சென்னை: 'இனப்பெருக்கம் உள்ளிட்ட தேவைகளுக்காக, வெளிநாடுகளில் இருந்து உயிருடன் பன்றிகளை இறக்குமதி செய்ய முன்னுரிமை அளிக்கப்படும்' என, தமிழக அரசின் பன்றி இனப்பெருக்க கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
தேசிய அளவில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல் அடிப்படையில், கால்நடைகளுக்கான தனித்தனி இனப்பெருக்க கொள்கை வகுக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தமிழக அரசு 2021ல் அமைத்த வல்லுனர் குழு, பன்றிகள் இனப்பெருக்க வரைவு கொள்கையை உருவாக்கியது. கடந்த 2022ல் அரசிடம் தாக்கல் செய்யப்பட்ட இன்பெருக்க கொள்கை, தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், கூறப்பட்டுள்ளதாவது:
இறைச்சி உற்பத்தியில் நம்பிக்கைக்கு உரிய ஆதாரமாக பன்றி வளர்ப்பு அமைந்து உள்ளது
ஒருங்கிணைந்த அணுகுமுறை வாயிலாக, பன்றி வளர்ப்பை அதிகரிக்க முடியும்
சாதாரண பன்றிகளின் மரபணு திறனை மேம்படுத்த, இனக்கலப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்
சாதாரண வகை பன்றி, காட்டுப்பன்றிக்கு பதிலாக, வேற்று இன பன்றிகளுடன் இணைந்துகலப்பினங்கள் உருவாக்கப்படும்
அறிவியல் முறைகளை பின்பற்றி, குறைந்த செலவில் தீவனங்களை உருவாக்கி, விவசாயிகள் இதில் அதிகம் ஈடுபட வழி செய்யப்படும்
செயற்கை கருவூட்டல் வாயிலாக, மேம்பட்ட வகை பன்றிகளின் இனப் பெருக்க திசுக்களை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
பெரிய வெள்ளை யாக் ஷையர், டூராக், லாண்ட்ரீஸ் போன்ற அயலின பன்றிகளின் இனப்பெருக்க திசுக்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும்
வெளிநாடுகளில் இருந்து உயிருள்ள பன்றிகளை இறக்குமதி செய்ய முன்னுரிமை அளிக்கப்படும்
பன்றிகளின் உறைவிக்கப்பட்ட விந்தணு இறக்குமதி குறித்து ஆராயப்படும்
இனக்கலப்பு முறையில் தனி இன பன்றிகளை உருவாக்க வழிமுறைகள் கையாளப்படும்
பன்றி வளர்ப்புக்கு வங்கிக் கடன், மானியங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.