ADDED : மார் 19, 2025 03:14 AM
புதுச்சேரி:புதுச்சேரியில் வர்த்தக நிறுவனங்களில், தமிழில் பெயர் பலகை வைக்க, முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
புதுச்சேரி சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி பிறப்பித்த உத்தரவு: புதுச்சேரியில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருப்பது கட்டாயம். பெயர் பலகையில் தமிழ் மொழியின் எழுத்து பெரிதாக இருக்க வேண்டும். இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. இது உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம்.
புதுச்சேரியில் உள்ள வணிகர்கள், வியாபாரிகள் தாய்மொழியான தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். அதை உணர்வுப் பூர்வமாக தாங்களே முன்வந்து செய்ய வேண்டும். அரசும் தமிழில் பெயர் பலகை வைக்க கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். கடந்த காலங்களில் இது முறையாக இருந்தது. அது மீண்டும் கொண்டு வரப்படும். அரசு விழா அழைப்பிதழ்களையும் தமிழில் தான் அச்சடிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார்.