விநாயகர் சிலை கரைப்பில் வழிகாட்டுது புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம்
விநாயகர் சிலை கரைப்பில் வழிகாட்டுது புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம்
UPDATED : ஆக 31, 2025 02:17 PM
ADDED : ஆக 29, 2025 11:44 PM

புதுச்சேரி: நாடு முழுதும் விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் விமரிசையாக நடைபெற உள்ள நிலையில், புதுச்சேரியில் இந்தாண்டு முன்மாதிரி முயற்சியாக சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கரைப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கும் அம்மாநில அரசின் முயற்சியை, அனைத்து மாநிலங்களும்
பின்பற்ற வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி, நாடு முழுதும், கடந்த 27ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினமும் பூஜைகள் நடக்கின்றன. இந்த சிலைகள், நாளை பல்வேறு இடங்களில், நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.மேள தாளம் முழங்க, பூமாலைகள், பிளாஸ்டிக் குடைகள், விதவிதமான ஆடை அலங்காரங்களில் ஊர்வலமாக கொண்டு வந்து சிலைகள் கரைக்கப்படும்.சில ஆண்டுகளாக களிமண் தவிர்த்து, ரசாயனம் கலந்த பிளாஸ்டர் ஆப் பாரிசில் செய்யப்படும் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்ததால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பட்டு, சிலைகளைக் கரைக்க தடை விதிக்கப்பட்டது.
மேலும், பூமாலை, பிளாஸ்டிக் குடைகள், ஆடை அலங்காரங்களை அப்படியே நீர்நிலைகளில் விட்டு விடுவதால், குப்பைகளாக டன் கணக்கில் சேகரமாகின்றன; இவையும் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாகவே உள்ளன. இப்பிரச்னைக்கு தீர்வு காண, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் அட்டகாசமான யோசனையை தெரிவித்து, முதல்முறையாக புதுச்சேரியில் இந்த ஆண்டு செயல்படுத்த உள்ளது.
புதுச்சேரியில், 1 அடி முதல், 31 அடி வரை, 1,000க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகளை, நாளை பழைய துறைமுகம் அருகே கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் சிலைகளை கரைக்க, புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம் பெரும் முயற்சி எடுத்துள்ளது.
மாலைகள்
ஊர்வலமாக கொண்டு வரப்படும் விநாயகர் சிலைகளில் அணிவிக்கப்பட்டிருக்கும் டன் கணக்கிலான மாலைகளை தனியாக சேகரிக்க, கடற்கரையில் தனி அரங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சேகரிக்கப்படும் மாலைகள், பிள்ளையார்குப்பத்தில் உள்ள சவுக்கு பண்ணை நர்சரிக்கு அனுப்பப்பட உள்ளன.
அங்கு, மாலைகளில் உள்ள நார்களை அகற்றிவிட்டு, பூக்கள் மட்டும் உரப்படுக்கையாக கொட்டப்படும். அதன் மீது மண்ணை கொட்டி மட்கும் வகையில் செய்யப்படும். 15 நாட்களுக்கு பின் அவை மட்கியதும், சவுக்கு மரக்கன்று உற்பத்திக்கும், தோட்டக்கலை செடிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட உள்ளன.
பிளாஸ்டிக் பொருட்கள்
கற்பூரம், ஊதுவத்தி, பிளாஸ்டிக் பைகள் உட்பட பல்வேறு பொருட்களும் தனித்தனியே சேகரிக்கப்பட உள்ளன. இவை, மறுசூழற்சி மூலப்பொருட்களாக அரைக்கப்பட்டு, பிளாஸ்டிக் பக்கெட், குவளை, மிதியடி உள்ளிட்ட பொருட்களாக மாற்றப்பட உள்ளன. இதற்காக மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஆடைகள்
மூன்றாவதாக விநாயகர் சிலைகளுக்கு உடுத்தப்படும் டன் கணக்கான ஆடைகளை சேகரித்து, அவற்றை சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு எரிபொருளாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. சிமென்ட் தொழிற்சாலையில் கழிவு பொருட்கள், எரிபொருளாக பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுடன் இவற்றையும் கலந்து பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காகவும் மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த மூன்று முயற்சிகள் மூலம், 2 டன் அளவிற்கு பூமாலைகள், 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், 750 கிலோ ஆடைகள் கடலில் கலக்காமல் மறுசுழற்சிக்கு அனுப்பப்பட உள்ளன.
'புதுச்சேரி அரசின் இந்த முன்மாதிரி முயற்சியை, தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தினால், கடற்கரையோரங்களும், சாலைகளும் அலங்கோலமாவதை தவிர்க்கலாம். மேலும், சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்க்கலாம்' என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.