ஏழை மாணவர்களை தண்டிப்பதா? அரசுக்கு அன்புமணி கண்டனம்
ஏழை மாணவர்களை தண்டிப்பதா? அரசுக்கு அன்புமணி கண்டனம்
ADDED : மே 23, 2025 04:35 AM

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளன. ஆனால், கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
கல்வி உரிமை சட்டப்படி, தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கட்டணத்தை, மத்திய - மாநில அரசுகள் தான் வழங்க வேண்டும். கடந்த இரு ஆண்டுகளாக, இந்த தொகை தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை.
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 2,151 கோடி ரூபாயை, மத்திய அரசு வழங்காததால், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தமிழக அரசு தாமதம் செய்வதாக தெரிகிறது.
மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதில், தமிழக அரசு அடைந்த தோல்விக்காக, ஏழை மாணவர்களை தண்டிக்கக்கூடாது.
கல்வி உரிமை சட்டப்படி, ஒரு லட்சம் ஏழை மாணவர்களை, தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி படிக்க வைக்க முடியும்.
தி.மு.க., அரசு அதன் தவறு மற்றும் அலட்சியம் காரணமாக, ஒரு லட்சம் ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறித்து விடக்கூடாது. எனவே, உடனடியாக மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.