விலை ஆதரவு திட்டத்தில் தேங்காய், உளுந்து கொள்முதல்
விலை ஆதரவு திட்டத்தில் தேங்காய், உளுந்து கொள்முதல்
ADDED : மார் 15, 2024 12:36 AM
சென்னை:நடப்பாண்டு, விலை ஆதரவு திட்டத்தில், கொப்பரை தேங்காய், உளுந்து, பச்சைப் பயறு கொள்முதல் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, அமைச்சர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில், 26 மாவட்டங்களில் உள்ள, 75 ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் வழியே, கடந்த ஆண்டு 48,364 விவசாயிகளிடம் இருந்து, 79,021.80 டன் அரவை கொப்பரை, 858.176 கோடி ரூபாய் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பந்து கொப்பரை 1 கிலோ 120 ரூபாய்; அரவை கொப்பரை 1 கிலோ 111 ரூபாய் 60 பைசா என, குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்பட உள்ளது.
மொத்தம் 90,300 டன் கொள்முதல் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, கொப்பரை கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜூன் 10 வரை கொள்முதல் நடக்கும்.
உளுந்து
தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 10 வரை, 17 மாவட்டங்களிலும், ஏப்.,1 முதல் ஜூன் 29 வரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுார், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், 53 ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள் வழியே, 1.42 லட்சம் டன் உளுந்து, குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
ஒரு கிலோ உளுந்துக்கு, குறைந்தபட்ச ஆதார விலையாக, 69 ரூபாய் 50 பைசா வழங்கப்படும்.
பச்சைப் பயறு
இன்று முதல் ஜூன் 10 வரை, திருவள்ளூர் மாவட்டத்திலும், ஏப்., 1 முதல் ஜூன் 29 வரை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலுார் மாவட்டங்களிலும், பச்சைப் பயறு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இம்மாவட்டங்களில் உள்ள, 11 ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில், 1,860 டன் குறைந்தபட்ச ஆதரவு விலையில், கொள்முதல் செய்யப்பட உள்ளது.
ஆதார விலையாக, 1 கிலோவுக்கு 85 ரூபாய் 58 பைசா வழங்கப்படும்.
எனவே, தென்னை, உளுந்து, பச்சைப்பயறு பயிரிட்டுள்ள விவசாயிகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை அணுகி, தங்கள் பெயர்களை, உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து, அதிக அளவில் பயன்பெறவும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

