ADDED : நவ 02, 2024 08:54 PM
சென்னை:தர்மபுரி, சேலம் உட்பட நான்கு மாவட்ட விவசாயிகளிடம் இருந்து, கேழ்வரகு கொள்முதல் செய்யும் பணியை, இம்மாதம், 1ம் தேதி முதல் துவக்க, நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, கேழ்வரகு வழங்கும் திட்டத்தை துவக்க உள்ளது. முதல் கட்டமாக, நீலகிரி, தர்மபுரியில் அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது.
தமிழக விவசாயிகளிடம் இருந்து, நடப்பு 2024 - 25 சீசனில், 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
எனவே, கேழ்வரகு அதிகம் விளையும் தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடம் இருந்து, இம்மாதம், 1ம் தேதி முதல், 2025 ஜன., 31ம் தேதி வரை கேழ்வரகு கொள்முதல் செய்ய, நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, கூட்டுறவு மற்றும் உணவு துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, கேழ்வரகு வழங்கும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு, 42.90 ரூபாய் குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்படும்.
இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய வகைகளில், அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவற்றை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தமிழக விவசாயிகளிடம், 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.
இதற்காக, இந்த சீசனில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக நல்ல விலை வழங்கப்படுகிறது. எனவே, அரசிடம் கேழ்வரகு வழங்கி, விவசாயிகள் பயன் பெறலாம். விவசாயிகளிடம் இருந்து, மத்திய அரசு அனுமதித்த அளவுக்கு கேழ்வரகு கொள்முதல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.