பொட்டு வைத்து; கயிறு கட்டக்கூடாது: ராஜா பேச்சால் தி.மு.க.,வில் கொந்தளிப்பு
பொட்டு வைத்து; கயிறு கட்டக்கூடாது: ராஜா பேச்சால் தி.மு.க.,வில் கொந்தளிப்பு
ADDED : ஏப் 03, 2025 07:08 AM

திருச்சி: சமீபத்தில் நீலகிரியில் தி.மு.க., மாணவரணி கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட தி.மு.க., துணைப் பொதுச்செயலர் ராஜா, '' தி.மு.க., வேட்டி கட்டும் போது, பொட்டு வைப்பது, கயிறு கட்டுவது போன்ற ஆன்மிக அடையாளங்கள் கூடாது,'' என பேசியிருந்தார்.
அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க.,வினர் சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். தி.மு.க., தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினரையே விமர்சிக்கும் வகையில் ராஜா பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் பதிவிட்டுள்ளனர்.
இது குறித்து, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த தி.மு.க., பிரமுகர் ஜெயராமன் முகநூலில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கட்சியின் துணைப் பொதுச்செயலரான ராஜா, தி.மு.க.,வில் இருக்கிறாரா; இல்லை, தி.க.,வில் இருக்கிறாரா என்றே தெரியவில்லை. பெரும்பான்மையினத்தவரின் மத வழிபாடு உரிமைகளிலும், அவர்கள் வழியில் செயல்படும் தி.மு.க.,வினரின் ஆன்மிக உணர்வுகளையும் புண்படுத்துவது போல செயல்படுகிறார்.
'யாருடைய மத வழிபாட்டு உரிமையிலும் தி.மு.க., குறுக்கிடாது' என முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். அவருடைய வீட்டிலும் வெளிப்படையாகவே கடவுளை வழிபடுகின்றனர். அமைச்சர்கள் சேகர்பாபு, நேரு ஆகியோரும் கோவில்களுக்குச் செல்வதோடு, ராஜா விருப்பத்துக்கு எதிராக கையில் கயிறு கட்டுகின்றனர்.
கட்சியில், யார் தி.மு.க., வேட்டி கட்ட வேண்டும் என்பதை ராஜா முடிவு செய்யக்கூடாது. தி.மு.க.,வினர் குறித்து கருத்து சொல்வதற்கு முன், தலைவர் ஸ்டாலின் அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

