'கொதிக்கிற நெய்யில கையை விடு'; மராட்டிய மன்னரின் தண்டனை குறித்த கல்வெட்டு
'கொதிக்கிற நெய்யில கையை விடு'; மராட்டிய மன்னரின் தண்டனை குறித்த கல்வெட்டு
ADDED : அக் 17, 2024 05:28 AM

சென்னை : குற்றவாளியைக் கண்டுபிடிக்க, கொதிக்கும் நெய்யில் கையை வைக்கும்படி கொடுமையான தண்டனையை, மராட்டியர்கள் வழங்கிய தகவல், தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டு வாயிலாக தெரிய வந்துள்ளது.
தஞ்சாவூரை, சோழர்களுக்கு பின் பாண்டியர்கள், நாயக்கர்கள், மராட்டியர்கள், பிரிட்டிஷார் ஆட்சி செய்தனர்.
மராட்டிய மன்னன் சிவாஜியின் சகோதரர் வெங்கோஜி எனும் ஏகோஜி, நாயக்கர்களின் வசமிருந்த தஞ்சையை 1674ல் கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து, 1684ல், முதலாம் சாகுஜியும், 1712 முதல் 1728 வரை முதலாம் சரபோஜியும் ஆட்சி செய்தனர்.
முதலாம் சரபோஜியின் ஆட்சிக் காலத்தில் நடந்த வழக்கும், அதற்கு வழங்கப்பட்ட வினோத தண்டனை குறித்தும் தஞ்சை பெரிய கோவிலின் கணபதி சன்னதியின் வடமேற்கு திசையில் உள்ள மராட்டிய கல்வெட்டின் வாயிலாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து, மத்திய தொல்லியல் துறையின் மைசூரில் உள்ள தென்மண்டல கல்வெட்டு பிரிவு இயக்குனர் முனிரத்தினம் கூறியதாவது:
தஞ்சாவூர் பெரிய கோவில் சுவர்கள், துாண்களில் நிறைய கல்வெட்டுகள் உள்ளன. அவற்றை, மத்திய தொல்லியல் துறை ஏற்கனவே படியெடுத்துள்ளது. அந்த படிகள், மைசூரில் உள்ளன.
தமிழ் கல்வெட்டுப் படிகள், ஏற்கனவே பலரால் படிக்கப்பட்டு, நுால்களாக பதிப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மராட்டிய கல்வெட்டுகள் படிக்கப்படாமல் இருந்தன.
தற்போது, நாட்டில் உள்ள மராட்டிய கல்வெட்டுகள் பற்றிய தொகுப்பு நுால் வெளியிடும் பணியில், மத்திய தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது. பெரிய கோவிலின், கணபதி சன்னதியின் வடமேற்கு சுவரில், நாகரி எழுத்தில் உள்ள மராட்டிய கல்வெட்டு, தற்போது படிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டு, சக ஆண்டு 1724ல் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, கலி ஆண்டு, 4903, துந்துபி ஆண்டு ஆடி மாதம் 8ம் நாள் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, துளஜா மகாராஜாவின் மகன் சரபோஜி மகாராஜா காலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டில், தஞ்சை நகரில் உள்ள வெட்டியான் காணி என்ற நிலத்துக்கான உரிமை குறித்து, தஞ்சியான், கோடியான், சினான் மற்றும் கல்வாட்டி ஆகியோருக்கு இடையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. வழக்கு மகாராஜாவிடம் சென்றுள்ளது.
அவர், கொதிக்கும் நெய்யில் நான்கு பேரையும் விரல்களை விடும்படி கூறி, அதன் முடிவின்படி, தஞ்சியான் என்பவனுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளார் என்ற தகவல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.