அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரானுடன் புடின் ஆலோசனை
அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரானுடன் புடின் ஆலோசனை
UPDATED : ஜூலை 22, 2025 11:55 AM
ADDED : ஜூலை 22, 2025 04:18 AM

மாஸ்கோ: ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மூத்த ஆலோசகர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து, மேற்காசியாவில் உள்ள நிலவரம் குறித்தும், அணுசக்தி திட்டத்தில் உள்ள பிரச்னைகள் குறித்தும் விவாதித்தார்.
மேற்காசிய நாடான ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் 2015ல் ஒப்பந்தம் மேற்கொண்டன. அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தில் இருந்து 2018ல் வெளியேறியது.
இதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இந்நிலையில், ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. இதற்கு தேவையான யுரேனியத்தை செறிவூட்டுவதில் தீவிரம் காட்டியது.ஈரானுக்கு அணு ஆயுதம் கிடைத்தால், அது தங்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் எனக் கூறிய இஸ்ரேல், ஈரான் அணுசக்தி மையங்கள் மீது கடந்த ஜூன் 13ல் தாக்குதல் நடத்தியது. இதில், அமெரிக்காவும் பங்கேற்று, ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசியது.அமெரிக்கா தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி சந்தித்துப் பேசினார். அப்போது, இருநாடுகள் இடையே மோதலை தணிப்பதாக ரஷ்யா உறுதி அளித்தது.
இதற்கிடையே, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து, 12 நாட்கள் நீடித்த மோதல் நிறுத்தப்பட்டது. அணுசக்தி தொடர்பான ஒப்பந்தம் குறித்து பேச வரும்படி, ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தது. ஆனாலும், எந்த ஒரு நிபந்தனையையும் ஏற்க மாட்டோம் என, ஈரான் உச்சத் தலைவர் கமேனி பகிரங்கமாக தெரிவித்தார். இதனால், இருதரப்பு பேச்சில் சுணக்கம் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலையில், கமேனியின் மூத்த ஆலோசகரும், ஈரான் பார்லிமென்டின் சபாநாயகருமான அலி லாரிஜானி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மாஸ்கோவில் நேற்று சந்தித்து பேசினார். அணுசக்தி திட்டம் தொடர்பான சாதக - பாதகங்கள், மேற்காசியாவில் தற்போதுள்ள நிலவரம் உள்ளிட்டவை குறித்து அவர்கள் விவாதித்ததாக, ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.