ADDED : அக் 09, 2025 02:52 AM
சென்னை:விசாரணைக்கு அழைக்கப்படும் நபர், பண மோசடி செய்யும் கும்பல்களிடம் சிக்காமல் இருக்க, அமலாக்கத் துறை, 'கியூஆர்' குறியீடுயுடன், 'சம்மன்' அனுப்பும் முறையை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
அமலாக்கத்துறை சார்பில், சட்ட விரோத பண பரிமாற்றம் மற்றும் அன்னிய செலாவணி மோசடி சட்டங்களின் கீழ் விசாரணைக்கு ஆஜராக, 'சம்மன்' அனுப்பப்படுகிறது.
சமீபத்தில், மர்ம நபர்கள் அமலாக்கத் துறை அதிகாரிகள் அனுப்பியதுபோல சம்மன் தயார் செய்து, 'ஆன்லைன்' வாயிலாக, 'டிஜிட்டல்' கைது செய்து, பண மோசடி செய்து வருவது தெரிய வந்துள்ளது.
பண மோசடி கும்பலிடம் சிக்காமல் இருக்க, இனி அமலாக்கத் துறை சார்பில், 'கியூஆர்' குறியீடுடன் சம்மன் அனுப்பப்படும். சம்மனில், அதிகாரிகள் கையெழுத்து, அலுவலக முத்திரை இருக்கும்.
இச்சம்மன் குறித்து சந்தேகம் எழுந்தால், அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும் அதிகாரியை தொடர்பு கொள்ள, அவரின் அலுவலக தொடர்பு எண், இ - மெயில் முகவரி தரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.