காலி மது பாட்டில் திரும்ப பெற இனி 'கியூ.ஆர்., கோடு' முறை
காலி மது பாட்டில் திரும்ப பெற இனி 'கியூ.ஆர்., கோடு' முறை
ADDED : டிச 07, 2025 04:51 AM
சென்னை: காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் தவறுகளை தடுக்க, மதுபான ஆலையில் இருந்து கொள்முதல் செய்யும்போதே, பாட்டில் லேபிளில், 'கியூ.ஆர்., கோடு' அச்சிட்டு வழங்க, 'டாஸ்மாக்' நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால், எந்த கடையில் இருந்து மது பாட்டில் வாங்கப்பட்டதோ, அங்கு மட்டுமே காலி பாட்டிலை திரும்ப வழங்குவது உறுதி செய்யப்படும்.
22 மாவட்டம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு காரணமாக, காலி பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை, டாஸ்மாக் செயல்படுத்தி வருகிறது. நீலகிரி உட்பட, 22 மாவட்டங்களில், அத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இத்திட்டத்தில் தவறுகளை தடுக்க, மதுபான ஆலையில் இருந்து பாட்டில்களை கொள்முதல் செய்யும்போதே, பாட்டில் அடிப்புறத்தில், 'கியூ.ஆர்., கோடு ஸ்கேன்' அச்சிட்டு வாங்க, டாஸ்மாக் முடிவு செய்துஉள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தற்போது காலி மது பாட்டிலை திரும்ப பெற, கடை எண் குறிப்பிடப்பட்டுள்ள, 'ஸ்டிக்கர்' கடை ஊழியர்களுக்கு மொத்தமாக வழங்கப்படுகிறது.
அவர்கள், கடையில் பாட்டிலை விற்கும்போது ஒவ்வொன்றிலும், 'ஸ்டிக்கர்' ஒட்டி விற்கின்றனர். இதனால், பணிச்சுமை ஏற்படுவதாக கூறுகின்றனர்.
சரிவர ஸ்டிக்கர் ஒட்டப்படாத நிலையில், காலி பாட்டிலை திரும்ப வழங்கும்போது, வாங்க மறுப்பதாக புகார் வருகிறது.
ஸ்டிக்கர் எனவே, மதுபான ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யும் போதே பாட்டில் அடிப்புறத்தில், 'கியூ.ஆர்., கோடு ஸ்கேன்' அச்சிடப்பட்டு வாங்கப்படும்.
இதனால், கடைகளில் மது பாட்டிலை ஸ்கேன் செய்து விற்பதுபோல், திரும்ப பெறும்போதும், 'ஸ்கேன்' செய்து வாங்கப்படும்.
இதனால், எந்த கடையில் மது பாட்டில் வாங்கப்பட்டதோ, அந்த கடையில் அதை திரும்ப வாங்குவது உறுதி செய்யப்படும். ஸ்டிக்கர் ஒட்ட வேண்டிய பணிச்சுமை ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை உள்ளதை ஒப்புக்கொள்கிறோம். சிரமங்களை தீர்க்க, என்னென்ன நடவடிக்கை வேண்டுமோ, அதை செய்வோம். காலி பாட்டில்களை அடுக்கி வைக்க இடம் போதுமானதாக இல்லை. வாகனம் அனுப்பி, ஒரு நாளைக்கு, கடையில் இருந்து இரு முறை காலி பாட்டில்களை திரும்ப பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. - முத்துசாமி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர், தி.மு.க.,

