ADDED : நவ 21, 2024 01:18 AM

சென்னை:அரசு மருத்துவமனைகளில் உள்ள ஹோட்டல்களுக்கு தர மதிப்பீடு செய்யும் பணியை, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் உள்ள ஹோட்டல்களில், சுகாதாரமற்ற முறையில் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன; ஹோட்டல் சமையல் அறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுவதில்லை போன்ற குற்றச்சாட்டு கள் எழுந்தன.
எனவே, தமிழகம் முழுதும் உள்ள, அரசு மருத்துவமனைகளில் உள்ள ஹோட்டல்களை ஆய்வு செய்து, தர மதிப்பீடு செய்ய, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை கமிஷனர் லால்வீனா உத்தரவிட்டார். அதன்படி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதேபோல், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஹோட்டல், டீக்கடை, மருத்துவக் கல்லுாரி விடுதியில் உள்ள கேன்டீன் ஆகியவற்றை, உணவு பாதுகாப்புத் துறை கமிஷனர் லால்வீனா தலைமையில், அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
அதன்படி, ஹோட்டல் பராமரிப்பு, சுகாதாரம், உணவின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில், உணவு சாப்பிட தகுதியான வளாகம் என சான்றழித்துள்ளனர்.
இதுகுறித்து, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு மருத்துவமனைகளின் ஹோட்டல்களில், தரத்தை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. அதன்படி, ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் உள்ள ஹோட்டல்கள், விடுதி கேன்டீன் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு, தர நிர்ணயம் செய்யப்படுகிறது. அதிகபட்சம், 120 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. அதில், 90க்கு மேல் மதிப்பெண் பெறும் ஹோட்டல்கள், தரமானதாக அங்கீகரிக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

