குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் வரும் 16ம் தேதி முதல் வேலை நிறுத்தம்
குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் வரும் 16ம் தேதி முதல் வேலை நிறுத்தம்
ADDED : ஏப் 14, 2025 06:11 AM

சென்னை : கட்டுமான பணிக்கு தேவையான, கருங்கல், ஜல்லி, எம்.சாண்ட் வழங்கும் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள், தமிழக அரசின் புதிய வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 16ம் தேதி முதல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்தில், கருங்கல், ஜல்லி வெட்டி எடுக்க, தனியார் நிலங்களில், 3,000க்கும் மேற்பட்ட இடங்களில் குவாரிகள் செயல்படுகின்றன.
கனிம வளத்துறை, சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் செயல்படும் இந்த குவாரிகளில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக கருங்கல் வெட்டி எடுத்து விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
கிடுக்கிப்பிடி
இதுதொடர்பாக, கனிம வளத்துறை கிடுக்கிப்பிடி போட்டு சோதனை நடத்தியது. அதனால், குவாரி உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சோதனையை கண்டித்து, 2023ல் வேலை நிறுத்தமும் செய்தனர். அமைச்சர் துரைமுருகன், அவர்களை அழைத்து பேசியதும், வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.
அதன்பின், கருங்கல் ஜல்லி, எம் .சாண்ட் போன்றவற்றின் விலையை, மூன்று முறை உயர்த்தினர். இதனால், கட்டுமான துறை பணிகளுக்கு, கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கனிம வள அடிப்படையில், நிலவரி விதிக்கும் புதிய சட்டத்தை, தமிழக அரசு சமீபத்தில் அமல்படுத்தியது.
இதன்படி, குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்களின் டன் கணக்கு அடிப்படையில், நிலவரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குவாரி உரிமையாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, திருச்சியில் நேற்று முன்தினம், தமிழக குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் நடந்தது.
கூடுதல் தொகை
அதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் தலைவர் கே.சின்னசாமி வெளியிட்ட அறிக்கை:
கருங்கல் குவாரிகளுக்கான கட்டணங்களை, தமிழக அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், கணக்கீட்டில் கட்டணங்களை, கன மீட்டருக்கு பதில் டன் அடிப்படையில் கணக்கிடும் போது, மூன்று மடங்கு வரை கூடுதல் தொகை செலுத்த வேண்டியுள்ளது.
குவாரிகளில் கனிமவளங்கள் எடுக்கும் மொத்த அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும் என்று கோரி வருகிறோம்.
மொத்த அளவுகள் அடிப்படையில், எங்களுக்கான வாகன பர்மிட்களை அளிக்க வேண்டும். இதில், மாதாந்திர அளவுகள் பிரித்து வழங்குவதை ஏற்க முடியாது.
கனிம வளங்கள் அடிப்படையிலான நில வரி விதிப்பால், ஒரு யூனிட் ஜல்லிக்கு, 1,380 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. 'எம். சாண்டுக்கு' ஒரு யூனிட்டுக்கு, 700 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டிஉள்ளது.
இதனால், ஒரு யூனிட், 4,000 ரூபாய் என இருந்த ஜல்லி விலையை, 5,000 ரூபாயாக உயர்த்த முடிவு செய்து இருக்கிறோம். இதேபோல, ஒரு யூனிட் எம்.சாண்ட் விலையை, 6,000 ரூபாயாகவும், பி. சாண்ட் விலையை, 7,000 ரூபாயாகவும் உயர்த்த முடிவு செய்து இருக்கிறோம்.
தட்டுப்பாடு வரும்
புதிதாக அமலுக்கு வந்துள்ள, நிலவரி விதிப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட, 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16ம் தேதி முதல், தமிழகம் முழுதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
ஏற்கனவே ஜல்லி, எம். சாண்ட் விலை உயர்வால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வேலை நிறுத்தத்தால், ஜல்லி, எம்.சாண்ட் தட்டுப்பாடு ஏற்படும்.
கட்டுமான பணிகள் முடங்கும் நிலை ஏற்படும் என்று, கட்டுமான துறையினர் தெரிவிக்கின்றனர்.