பொன்முடி மீதான குவாரி வழக்கு; மேலும் ஒரு சாட்சி 'பல்டி'
பொன்முடி மீதான குவாரி வழக்கு; மேலும் ஒரு சாட்சி 'பல்டி'
ADDED : மார் 06, 2024 03:25 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில், முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் மேலும் ஒருவர் பிறழ் சாட்சியம் அளித்ததால் மீண்டும் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் விதிமுறை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததால் அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். 8 பேரில் லோகநாதன் என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார்.
வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடக்கிறது.
வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு 16 பேர் இதுவரையில் சாட்சியம் அளித்துள்ளனர்.
அதில், 13 பேர் அரசு தரப்பிற்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. கோபிநாத், ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார் ஆகியோர் மட்டும் ஆஜராகினர்.
வழக்கில் நேற்று அரசு தரப்பு 17வது சாட்சியாக ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ., அனந்தசயனன் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், 'நடந்த சம்பவம் பற்றி தனக்கு ஏதும் தெரியாது.
உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் வழக்கு தொடர்புடைய கோப்புகளில் கையெழுத்திட்டேன்.
தனக்கும், இந்த வழக்கிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை' எனக் கூறி அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்தார்.
இதையடுத்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, வழக்கின் விசாரணை இன்றைக்கு (6ம் தேதி) நடைபெறும் என உத்தரவிட்டார்.

