குவாரிக்கு ரூ.21 கோடி அபராதம்; அதிகாரிகளுக்கு ஐகோர்ட் 'செக்'
குவாரிக்கு ரூ.21 கோடி அபராதம்; அதிகாரிகளுக்கு ஐகோர்ட் 'செக்'
ADDED : ஜூலை 15, 2025 06:21 AM

மதுரை; 'விதிமீறல் குவாரிக்கு விதிக்கப்பட்ட, 21 கோடி ரூபாய் அபராத தொகையை வசூலிக்காவிடில், அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பிற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு' என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
விருதுநகர் மாவட்டம், எரிச்சநத்தத்தை சேர்ந்த பாபநாசம் என்பவர் தாக்கல் செய்த மனு:
எரிச்சநத்தத்தில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள புஞ்சை நிலப்பகுதியில், ஒருவர் குவாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். விதிமீறல் உள்ளது. குவாரிக்கு தடை விதிக்க கனிமவளத்துறை முதன்மை செயலர், இயக்குநர், உதவி இயக்குநர், கலெக்டர், சிவகாசி தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பாலன் ஆஜரானார்.
அரசு பிளீடர் திலக்குமார், ''அனுமதித்த அளவைவிட அதிகப்படியாக குவாரி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக, 21 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அபராதத்தை சட்டம், நடைமுறைகளை பின்பற்றி சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்பதை குறிப்பிட தேவையில்லை. வசூலிக்கப்படாவிடில், மாநில அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பிற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.