கல் குவாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ் ஜல்லி, எம்.சாண்ட் விலை இன்று முதல் உயர்வு
கல் குவாரி உரிமையாளர்கள் ஸ்டிரைக் வாபஸ் ஜல்லி, எம்.சாண்ட் விலை இன்று முதல் உயர்வு
ADDED : ஏப் 22, 2025 06:54 AM
சென்னை: ''ஜல்லி மற்றும் எம்.சாண்ட் விலையை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசு அனுமதித்துள்ளதால், எங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொண்டோம். விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது,'' என, கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சின்னசாமி தெரிவித்தார்.
விளக்கம்
கனிமவளத்துறை புதிதாக அமல்படுத்திய, வரி விதிப்பை கைவிட வேண்டும் என்பது உட்பட, 24 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள், சில தினங்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தலைமைச் செயலகத்தில், அமைச்சர் துரைமுருகன், இயற்கை வளங்கள் துறை செயலர் பணீந்திர ரெட்டி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர் சரவணவேல்ராஜ் ஆகியோர் முன்னிலையில், நேற்று குவாரி உரிமையாளர்களுடன் பேச்சு நடந்தது.
அப்போது அரசு தரப்பில், வரி விதிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அதை ஏற்று குவாரி உரிமையாளர்கள், தங்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
சாத்தியமில்லை
இதுகுறித்து, கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர் சங்கத் தலைவர் சின்னசாமி அளித்த பேட்டி:
புதிய வரி விதிப்பால், குவாரி தொழிலில் கடும் சிரமம் ஏற்பட்டது. அதை அரசுக்கு தெரியப்படுத்த, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், எங்களை அழைத்து பேசினர். வரி விதிப்பிற்கான காரணத்தை தெரிவித்தனர். மேலும், உடனே வரியை குறைக்க சாத்தியமில்லை; சிறிது கால அவகாசம் தேவை என்றனர். அதை ஏற்றுக் கொண்டோம்.
வரி விதிப்பு உயர்வுக்கு ஏற்ப, விலையை ஏற்றி விற்க, அமைச்சரும், அதிகாரிகளும் அனுமதி அளித்துள்ளனர். எனவே, இன்று முதல் ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் போன்றவற்றின் விலை உயரும்.
டன்னுக்கு 250 ரூபாய், யூனிட்டுக்கு 1,000 ரூபாய் விலை அதிகரிக்கும். உதாரணமாக, எம்.சாண்ட் 6,000 ரூபாய் என்பது 7,000 ரூபாய், ஜல்லி 4,000 ரூபாய் என்பது 5,000 ரூபாயாக உயரும்.
ஒத்துழைப்பு
அரசுக்கு செலுத்தும் வரியை விட குறைவாகவே, விலையை உயர்த்தி உள்ளோம். நாங்கள் கொள்ளை அடிப்பதில்லை. சிரமப்பட்டு குவாரி தொழில் செய்கிறோம்.
விவசாயத்திற்கு அடுத்தபடியாக முக்கியமான இத்தொழிலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கல் குவாரி, கிரஷர்கள் இன்று முதல் இயங்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.