2 ஆண்டுகளுக்கு முந்தைய கேள்வி: செல்லுார் ராஜு கிண்டல்
2 ஆண்டுகளுக்கு முந்தைய கேள்வி: செல்லுார் ராஜு கிண்டல்
ADDED : மார் 29, 2025 07:02 AM

சென்னை; ''சட்டசபையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட கேள்விக்கு, குறிஞ்சி மலரை போல், இப்போதுதான் பதில் கிடைத்துள்ளது,'' என அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்லுார் ராஜு பேசினார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - செல்லுார் ராஜு: குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பது போல, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, நான் கேட்ட கேள்விக்கு பதில் வந்துள்ளது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய, எம்.டி., படித்த டாக்டரை நியமிக்க வேண்டும்.
இரண்டு தளங்களுடன் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் கட்ட, 20 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளனர். மூன்று அடுக்குமாடி கட்டடம் கட்ட, பரிசீலிக்க வேண்டும்.
அமைச்சர் சுப்பிரமணியன்: ராஜாஜி மருத்துவமனையில், குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய, உரிய நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மேற்கு தொகுதி அருகில்தான், ராஜாஜி மருத்துவமனை உள்ளது. எம்.எல்.ஏ., அங்கு சென்று பார்த்த பிறகு பேச வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.