ADDED : டிச 18, 2024 08:18 PM

கோவை: '' ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளை மக்கள் நேரடியாக கேள்வி கேட்கும்போது தான், அரசியல்வாதிகளுக்கு பொறுப்பு ஏற்படும், '' என கோவையில் நடந்த தொழிலதிபர்களுக்கு விருது வழங்கும் விழாவில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
கோவையில் தொழிலதிபர்களுக்கு விருது வழங்கும் விழாவில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் உள்ள மொத்த கல்லூரிகளில் கோவையில் மட்டும் 27 சதவீதம் உள்ளது. இந்தியாவில் சிறுகுறு தொழில் அதிகமுள்ள மாநிலம் தமிழகம். இதில் கோவையில் 2.41 லட்சம், சென்னையில் 3.40 லட்சம் சிறுகுறுதொழில்கள் உள்ளன.தமிழகத்தின் ஜிடிபி.,யில் கோவையின் பங்கு 7.5 சதவீதம் ஆகும். ஆண்டுதோறும் கோவையில் இருந்து தமிழக அரசுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வரி வருவாயாக செல்கிறது.
நாடு வேகமாக வளர்ச்சி பெறுகிறது. அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து வளர்கிறது. இது கோவையின் பங்கு அதிகம் உள்ளது.
அரசியல்வாதிகள் வேகமாக செயல்படுகிறோமா என்பதை பார்க்க வேண்டும். நீங்கள் அழுத்தம் கொடுத்து வேலை வாங்க வேண்டும். கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த 15 ஆண்டுகள் ஆகி உள்ளது. திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த 14 ஆண்டுகளும், மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த 5 ஆண்டுகள் ஆகி உள்ளது.
தமிழகத்தில் ஒதுக்கப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் 26 சதவீத நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டு உள்ளது. 74 சதவீதம் நிலுவையில் உள்ளது. நெடுஞ்சாலை திட்டங்களில் 40 ல் 18 திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும். கோவையில் 3 ஆண்டுகளில் 36 ஆயிரம் கோடி வரி கொடுத்துள்ள நிலையில், திரும்ப அரசு எவ்வளவு கொடுத்துள்ளது.
நல்ல அரசியல் மாற்றத்திற்கான மாவட்டமாக கோவை இருக்க வேண்டும். வளர்ச்சி சார்ந்த அரசியல் இருக்க வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் கேள்வி கேளுங்கள். கேள்வி கேட்க கேட்க அரசியல்வாதிகளுக்கு பொறுப்பு ஏற்படும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.