ரேஸ் கிளப் குத்தகை ரத்து வழக்கு நிலம் யார் வசம் என கேள்வி
ரேஸ் கிளப் குத்தகை ரத்து வழக்கு நிலம் யார் வசம் என கேள்வி
ADDED : செப் 20, 2024 01:31 AM
சென்னை:சென்னை ரேஸ் கிளப்பிற்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான குத்தகை ரத்தை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குத்தகை நிலம் யார் வசம் உள்ளது என்பது குறித்து, அரசு தரப்பில் பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, கிண்டியில் ரேஸ் கிளப் உள்ளது. 160.68 ஏக்கர் நிலத்தை, 99 ஆண்டுகளுக்கு ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு, அரசு குத்தகைக்கு வழங்கியது. 730.86 கோடி ரூபாய் குத்தகை பாக்கி தரும்படி, ரேஸ் கிளப்பிற்கு, தாசில்தார் நோட்டீஸ் அனுப்பினார். அதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ரேஸ் கிளப் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
மேல்முறையீடு
வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வாடகை பாக்கியாக கோரப்பட்டுள்ள 730.86 கோடி ரூபாயை ரேஸ் கிளப் நிர்வாகம் செலுத்தவும், இல்லையென்றால் அங்கிருந்து அகற்றவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, ரேஸ் கிளப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ரேஸ் கிளப்புக்கு வழங்கிய குத்தகையை ரத்து செய்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் மனுத் தாக்கல் செய்தது. இம்மனு, நீதிபதி டீக்காராமன் முன், விசாரணைக்கு வந்தது.
ரேஸ் கிளப் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, ''நிலத்தை, அரசு வசம் ஒப்படைப்பதற்கு, 24ம் தேதி கடைசி நாள். எனவே, வழக்கின் அவசரம் கருதி, அரசுக்கு நோட்டீஸ் வழங்குவதற்கு விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும்,'' என்றார்.
வருவாய் துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ''குத்தகை நிலம் கடந்த 9ம் தேதி அரசு வசம் எடுக்கப்பட்டு விட்டது. அதனால், எந்த அவசரமும் இல்லை,'' என்றார்.
பதில் மனு
இதையடுத்து, நீதிபதி டீக்காராமன் பிறப்பித்த உத்தரவு:
'அரசு வசம் நிலம் இன்னும் எடுக்கப்படவில்லை' என ரேஸ் கிளப் தரப்பிலும், 'அரசு வசம் நிலம் எடுக்கப்பட்டு விட்டது' என அரசு தரப்பிலும் கூறுவதால், இதுகுறித்து அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன், 'ஏற்கனவே அரசு வசம் நிலம் எடுக்கப்பட்டு விட்டதால், இதில் அவசரம் இல்லை' என்றார். எனவே, குத்தகை நிலம் குறித்து, உரிய விபரங்களுடன், பதில் மனுத் தாக்கல் செய்வதற்காக, விசாரணை, வரும் 23க்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.