பொம்மை முதல்வரை தேடுகிறது பா.ஜ., பிரசாரத்தில் ராகுல் கடும் விமர்சனம்
பொம்மை முதல்வரை தேடுகிறது பா.ஜ., பிரசாரத்தில் ராகுல் கடும் விமர்சனம்
ADDED : ஏப் 19, 2026 02:17 AM

சென்னை: ''தமிழகத்தை ஆள, பொம்மை முதல்வரை பிரதமர் மோடி தேடுகிறார்,'' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி; ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர்; திருச்சி மாவட்டம், துறையூர் ஆகிய தொகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் பிரசாரம் செய்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
மத்திய பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., தமிழகத்தின் மொழி, கலாசாரத்தை எப்போதெல்லாம் தாக்குகிறதோ, அப்போதெல்லாம் என்னை நான் தமிழனாக உணர்ந்துள்ளேன். மத்திய அரசு, பெண்களுக்கான மசோதா என்ற பெயரில் தொகுதி மறுவரையறை மசோதாவை தாக்கல் செய்தது.
தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்க வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம். ஆனால், அச்சட்டத்தை நிறைவேற்ற விடாமல் நாங்கள் முறியடித்தோம்.
பிரதமர் மோடி எப்போதெல்லாம், 'ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி, ஒரே மதம்' என்று சொல்கிறாரோ, அப்போதெல்லாம் அவர் இந்திய அரசியல் அமைப்பை தாக்குகிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடியை எப்படி சமரசம் செய்தாரோ, அதேபோல் தமிழகத்தை ஆள, சமரசம் செய்யப்பட்ட முதல்வர் பா.ஜ.,வுக்கு தேவைப்படுகிறது.
நாங்கள் கூட்டணி கட்சிகளை சமமாக நடத்துகிறோம். ஆனால், பா.ஜ., புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி, கூட்டணி கட்சிகளை மிரட்டுகிறது. மத்தியில் காங்., ஆட்சியில் இருந்தபோது, தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை மிரட்டி பணிய வைத்ததில்லை.
அ.தி.மு.க., என்ற வரலாற்று கட்சி இப்போது அழிந்து விட்டது. அ.தி.மு.க.,வை கருவியாக பயன்படுத்தி, தமிழகத்துக்குள் நுழைய பா.ஜ., முயற்சிக்கிறது.
பிரதமர் மோடி எந்த விலை கொடுத்தாவது, முதல்வர் ஸ்டாலினை நீக்கி, அந்த இடத்துக்கு ஒரு பொம்மை முதல்வரை கொண்டு வர முயற்சிக்கிறார்.
ஸ்டாலின் தன் கொள்கையில் சமரசம் செய்துகொள்ள மாட்டார். அவரை மிரட்டியோ, அழுத்தம் கொடுத்தோ பணிய வைக்க முடியாது. அதனால் தான், அந்த இடத்துக்கு அ.தி.மு.க.,வை கொண்டு வர முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
