வெளிநாடுகளுக்கு ஆட்கள் கடத்தல் சந்தேக ஏஜன்ட் அலுவலகங்களில் 'ரெய்டு' சந்தேக ஏஜன்ட் அலுவலகங்களில் 'ரெய்டு'
வெளிநாடுகளுக்கு ஆட்கள் கடத்தல் சந்தேக ஏஜன்ட் அலுவலகங்களில் 'ரெய்டு' சந்தேக ஏஜன்ட் அலுவலகங்களில் 'ரெய்டு'
ADDED : டிச 21, 2024 12:17 AM
சென்னை:வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்துவது தொடர்பாக, சந்தேகத்திற்குரிய ஏஜன்ட் அலுவலகங்களில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தினர்.
அடிப்படை கணினி அறிவு, தட்டச்சு, ஆங்கில மொழி தெரிந்த இளைஞர்களை, 'சைபர்' அடிமைகளாக்க, கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்துவது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்திய சைபர் குற்றத்தடுப்பு ஒருங்கிணைப்பு மையம் வாயிலாக, வெளிநாடுகளில் உள்ள, தமிழகத்தைச் சேர்ந்த 1,285 பேரின் விபரங்களை பெற்று, சரிபார்த்து வருகின்றனர். அவர்களில், சுற்றுலா மற்றும் வியாபாரம் தொடர்பாக சென்றவர்கள் போக, 114 பேர் என்ன ஆயினர் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
மேலும், வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்திய ஏஜன்டுகள், 10 பேரை கைது செய்துள்ளனர். கம்போடியா, லாவோஸ் நாடுகளில் இருந்து திரும்பிய 189 பேரிடம், அங்கு சைபர் அடிமைகளாக்கப்பட்ட இளைஞர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.
அதன் தொடர் நடவடிக்கையாக, தமிழகத்தில் இருந்து 114 பேரை, கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பிய, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சந்தேகத்திற்குரிய, 20க்கும் மேற்பட்ட ஏஜென்ட்களின் அலுவலகங்களில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தினர்.
அவர்கள் கூறியதாவது:
சில தினங்களுக்கு முன், கேரளாவில் இருந்து கம்போடியாவுக்கு கடத்த இருந்த இருவர் மீட்கப்பட்டனர். திருச்சியை சேர்ந்த போலி ஏஜன்ட் கைது செய்யப்பட்டார். அதுபோன்ற போலி ஏஜன்டுகள் எத்தனை பேர் உள்ளனர், அவர்களிடம் இளைஞர்கள் சிக்கி உள்ளனரா என்பது குறித்து அறிய, சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

