'ரயில் மதத்' செயலியில் பயணியர் புகாருக்கு தீர்வு பயணியர் புகாருக்கு உடனுக்குடன் தீர்வு தரும் 'ரயில் மதத்' செயலி
'ரயில் மதத்' செயலியில் பயணியர் புகாருக்கு தீர்வு பயணியர் புகாருக்கு உடனுக்குடன் தீர்வு தரும் 'ரயில் மதத்' செயலி
ADDED : ஆக 14, 2025 03:14 AM
சென்னை:பயணியர் புகாருக்கு உடனுக்குடன் தீர்வு அளிக்கும் வகையில், 'ரயில் மதத்' செயலி செயல்பட்டு வருவதாகவும், 2024 - 25ல், 1.69 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாகவும், தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணியருக்கு பாதுகாப்பு தேவை, அவசர மருத்துவ தேவை, ரயில்கள் இயக்கம், வசதிகள் தொடர்பான புகார்கள், உணவு பிரச்னைகள் உள்ளிட்ட ரயில்வே தொடர்பான அனைத்தையும், இந்த செயலியில் தெரிவிக்கலாம். அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது.
தெற்கு ரயில்வேயில், கடந்த 2024- - 25ம் ஆண்டில் மட்டும், இந்த செயலி வாயிலாக, 1.69 லட்சம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. அதிகபட்சமாக புகார் பெற்ற, எட்டு நிமிடங்களில் தீர்வு அளிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 8ம் தேதி, விரைவு ரயிலின் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்த ஒருவருக்கு, காலில் ஆழமான வெட்டு ஏற்பட்டு, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதாக புகார் செய்யப்பட்டது. தகவல் வந்தவுடன் உடனடியாக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, அந்த பயணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ரயில் மதத் செயலி மட்டுமல்லாமல், '139' என்ற அவசர உதவி எண், ரயில்வே இணையதளம், சமூக ஊடகங்கள், இ - மெயில் உட்பட பல வழி களில் புகார்கள் பெறப்படுகின்றன. இருப்பினும், 58 சதவீதத்துக்கும் அதிகமாக புகார்கள், 'ரயில் மதத்' செயலி வாயிலாகவே பெறப்பட்டு, தீர்வு காணப்படுகின்றன. ரயில் பயணியருக்கு அவசர கா லத்தில் உதவும், ஒரு உயிர்நாடியாக இந்த செயலி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.